ஜம்மு காஷ்மீர் தொடர்பான 370-ஆவது சட்டப் பிரிவு மறு விவாதத்திற்கு உள்படுத்தப்பட வேண்டும் என்கிற குஜராத் முதல்வரும், பாஜகவின் பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடியின் அறிவிப்பு, பாஜக தலைமைக்கே அதிர்ச்சி அளித்திருப்பதில் வியப்பொன்றுமில்லை. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குத் தனி அந்தஸ்தையும், உரிமைகளையும் அளிக்கும் அரசியல் சட்டத்தின் இந்தப் பிரிவை அகற்ற வேண்டும் என்பது பாஜகவின் கொள்கை முழக்கங்களில் ஒன்றாக இருப்பதால், இந்தப் பிரச்னையில் மாற்றுக் கருத்துக்கோ விவாதத்திற்கோ அவசியமே இல்லை என்கிற பாஜக தலைமையின் அறிவிப்பு எதிர்பார்த்த ஒன்றுதான்.
இந்தியாவுடனான இணைப்புக்கு ஜம்மு காஷ்மீர் தொடர்பான அரசியல் சட்டப் பிரிவு 370 தான் அடிப்படை. இந்த சட்டப் பிரிவின்படி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், இந்தியாவின் ஏனைய பகுதிகளில் வசிப்பவர்கள் சொத்துகளை வாங்கவோ, குடியேறவோ முடியாது. ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் குடியேறவும், சொத்துரிமை பெறவும் முடியும் எனும்போது, அங்கே இந்தியாவின் ஏனைய பகுதிகளில் வசிப்பவர்கள் குடியேற முடியாது என்பது எப்படி சரி என்பதுதான் 370-ஆவது சட்டப் பிரிவை அகற்றக் கோருபவர்களின் வாதம்.
ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ இணைவதா இல்லை தனி நாடாகத் திகழ்வதா என்கிற கேள்வி 1947 பிரிவினையின்போது எழுந்தபோது, ஜம்மு காஷ்மீருக்கு சட்டப் பிரிவு 370-இன் மூலம் தனி அந்தஸ்து தரப்படும் என்கிற வாக்குறுதியின் அடிப்படையில்தான் இந்திய யூனியனில் காஷ்மீர் இணைக்கப்பட்டது. இந்தியாவுடன் இணைவதன் மூலம், இந்தியாவின் பிற பகுதியினர் பெருவாரியாகக் குடியேறினால், "காஷ்மீரியத்' என்கிற தங்களது தனித்தன்மை அழிந்துவிடும் என்கிற நியாயமான பயம்தான் அவர்கள் இப்படியொரு தனி அந்தஸ்து கோருவதற்கு அடிப்படைக் காரணம்.
வட இலங்கையில் ராஜபட்ச அரசு சிங்களர்களைக் குடியேற்றுவதை நாம் எதிர்க்கிறோம். ஏன்? அங்கே தமிழினம் அழிக்கப்படுவதற்கும், அவர்களது உரிமைகள் பறிக்கப்படுவதற்கும் அது வழிகோலும் என்பதால்தான். அதேபோல, இந்தியாவின் பிற பகுதியினர் இங்கே குடியேறாதீர்கள் என்கிறார்கள் காஷ்மீர் மக்கள். பிற பகுதியினரின் குடியேற்றத்தால் தங்களது தனித்தன்மை அழிந்துவிடும் என்கிற அச்சத்தில் இருக்கும் நியாயத்தை ஏற்றுக்கொள்ளும் அதேநேரத்தில், அதே காஷ்மீரியத்துக்குச் சொந்தக்காரர்களான இந்து காஷ்மீரி பண்டிட்டுகளை அவர்களது சொத்துகளையும் வீடுகளையும் அபகரித்துக்கொண்டு விரட்டியடித்த அநியாயத்தை நாம் எப்படி ஏற்றுக் கொள்வது? சட்டப் பிரிவு 370 என்று சொன்னாலே ரத்தக் கொதிப்பு அதிகரிக்கும் பிரிவினைவாதி கிலானி போன்றவர்கள் இந்தக் கேள்விக்கு பதிலளித்து விட்டல்லவா நியாயம் கேட்க வேண்டும்?
அரசியல் சட்டப் பிரிவு 370ஐ அகற்றுவதற்கு காஷ்மீர் மக்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதில் நியாயம் இருக்கிறது. அவர்களது உரிமை பறி போகிறது; கலாசாரம் அழிந்துவிடும் அபாயம் இருக்கிறது என்பதால் எதிர்க்கிறார்கள். இங்கே இருப்பவர்கள் ஏன் எதிர்க்கிறார்கள்? காஷ்மீர் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும் என்று குரல் கொடுப்பவர்கள், மன்னர் மானியம் ஒழிக்கப்பட்டபோது அதை ஏன் ஆதரித்தார்கள்? அதுமட்டும் வாக்குறுதி இல்லையா? மத ரீதியான சகோதரத்துவம் என்று சொன்னால், அது தவறில்லையா? அப்படிப் பேசுபவர்கள், பாஜகவை மதவாதக் கட்சி என்று குற்றம் சாட்ட என்ன உரிமை இருக்கிறது?
சட்டப் பிரிவு 370 அகற்றப்படுவதால் சராசரி இந்தியர் யாரும் பயனடையப் போவதில்லை. காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள குங்குமப்பூ வயல்களையும், ஆப்பிள் தோட்டங்களையும் வாங்கத் துடிக்கும் பணக்காரர்களும், நிறுவனங்களும்தான் பயனடையப் போகிறார்கள் என்பதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
முறையாக தேர்தல் நடத்தப்பட்டபோதெல்லாம், தீவிரவாதிகளின் அச்சுறுத்தலையும் மீறி வாக்களித்து வரும் காஷ்மீர் மக்களின் எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கையையும் இதுவரை எந்தவொரு ஆட்சியும் பூர்த்தி செய்யவில்லை. முறையான சாலைகள், பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற எந்த வளர்ச்சிப் பணிகளும் காஷ்மீரில் நடக்கவில்லை. வளர்ச்சிப் பணிகள் முறையாக முடுக்கி விடப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளும், உறுப்பினர்களும் பொறுப்புடன் செயல்பட்டால், காஷ்மீரின் நிலைமை நிச்சயமாக மாறும். காஷ்மீருக்கான கோடிக்கணக்கான ரூபாய் ஒதுக்கீடை அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் ஒதுக்கிக் கொள்கிறார்கள். இதுதான் நிஜ நிலைமை.
ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லாவுக்கு ஒரு வேண்டுகோள். மாநில அதிகாரம் குறித்து நீங்கள் காட்டும் அக்கறையில் ஒரு விழுக்காடு அக்கறையையாவது, உங்கள் உள்ளாட்சிகளிடம் காட்டினால் பிரச்னை பாதி தீர்ந்துவிடும். நரேந்திர மோடிக்கு ஒரு கேள்வி - சட்டப் பிரிவு 370 ஐ விவாதிக்க இப்போது என்ன அவசியம்? இதனால் யாருக்கு என்ன லாபம்?
No comments:
Post a Comment