Friday, December 13, 2013

பி.ஆர்.பி. கிரானைட் மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

மதுரையில் கிரானைட் சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக "சீல்' வைக்கப்பட்டுள்ள குவாரிகளைத் திறக்க அனுமதி கேட்டு பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.
இது தொடர்பான வழக்கை நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், ஏ.கே. சிக்ரி அடங்கிய அமர்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது. அப்போது பி.ஆர்.பி. நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ஹரீஷ் சால்வே முன்வைத்த வாதம்:
"முழுமையாக ஆய்வு நடத்தாமல் எல்லா குவாரிகளையும் மூட தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கை சட்டவிரோதமானது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் அவர்களின் குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு நடத்திய ஆய்வை ஏற்காமல் மத்திய அரசு மூலம் குழு அமைத்து குவாரிகளில் மறு ஆய்வு நடத்த உத்தரவிட வேண்டும். இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கிரானைட் கற்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் பி.ஆர்.பி. நிறுவனம் முக்கியமானது. எனவே, குவாரிகளைத் திறக்க உத்தரவிட வேண்டும்' என்று வாதிட்டார்.
அதற்கு ஆட்சேபம் தெரிவித்து தமிழக அரசு சார்பில் வழக்குரைஞர் அரிமா சுந்தரம் முன்வைத்த வாதம்:
"மதுரையைச் சுற்றி 175 குவாரிகள் உள்ளன. அவற்றில் ஆய்வு நடத்தியதில் 78 குவாரிகள் விதிகளை மீறி சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்தது கண்டறியப்பட்டது. இதனால் சுமார் ரூ. 12,390.460 கோடி அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அவற்றின் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பி.ஆர்.பி. நிறுவனத்துக்குச் சொந்தமான 22 குவாரிகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே, பி.ஆர்.பி. நிறுவனம் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறுவதை ஏற்கக் கூடாது.
வழக்கு முடியும்வரை அந்த குவாரிகளைத் திறக்க உத்தரவிடக் கூடாது' என்று அரிமா சுந்தரம் கேட்டுக் கொண்டார்.
இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் அளித்த தீர்ப்பு:
"குவாரிகளை திறக்க அனுமதி கேட்டு பி.ஆர்.பி. நிறுவனம் தொடர்ந்த வழக்கை மதுரை உயர் நீதிமன்ற கிளை விசாரித்துள்ளது. இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. குவாரிகளில் பணியாற்றிய தொழிலாளர்களின் நலனுக்காக சில உத்தரவுகளை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்துள்ளது. எனவே, குவாரிகளைத் திறக்க அனுமதிக்க முடியாது என கடந்த பிப்ரவரி மாதம் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்யவோ, தலையிடவோ உச்ச நீதிமன்றம் விரும்பிவில்லை.
அந்த நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கடந்த ஆண்டு டிசம்பர் 14-ஆம் தேதி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவும் சரியானது என்றே கருதுகிறோம். எனவே, பி.ஆர்.பி. எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
பின்னணி: மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் அரசு புறம்போக்கு நிலங்கள், பொதுப்பணித் துறை கண்மாய்கள், குத்தகைக்கு ஒதுக்கப்பட்ட மலைப் பகுதியை விட கூடுதலான மலைகளில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான கிரானைட் கற்கள் வெட்டி எடுத்ததாக பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனம் மீது தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அதைத் தொடர்ந்து, சட்டவிரோதமாகக் செயல்பட்டதாகக் கூறி பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட குவாரிகளுக்கு சீல் வைத்து மதுரை மாவட்ட ஆட்சியர் கடந்த ஆண்டு சீல் வைத்தார். இதன் தொடர்ச்சியாக பி.ஆர்.பி. நிறுவன அதிபர் பழனிச்சாமி உள்ளிட்டோர் மீது 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில், "குவாரிகள் மூடப்பட்டதால் அதில் பணியாற்றி வந்த சுமார் மூன்றாயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்; குவாரிகள் வெட்டப்படுவது நின்று விட்டதால் அரசுக்கும் அன்னிய செலாவணி கிடைக்காத நிலை உள்ளது. மேலும், ஒரு சில குவாரிகளை ஆய்வு செய்து விட்டு 175 குவாரிகளையும் மூட தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கை தவறானது. எனவே, அவற்றைத் திறக்க வேண்டும்' என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனம் தொடர்ந்த வழக்கு கடந்த பிப்ரவரி மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது.
அந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பழனிச்சாமி மேல்முறையீடு செய்த வழக்கு வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் கோரி மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் வழங்கக் கோரி பேராசிரியர் ஏ. மார்க்ஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.
இது தொடர்பான மனுவை விசாரித்து நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், ஏ.கே. சிக்ரி அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பு:
"தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் சார்பில் கடந்த மே மாதம் 22-ஆம் தேதி நடத்தப்படவிருந்த ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்யக் கோரி மனுதாரர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அத்தேர்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் குறைந்தபட்ட "கட் ஆஃப்' மதிப்பெண் வழங்க வகை செய்யும் அறிவிக்கை வெளியிட வேண்டும் என்றும் மனுதாரர் உயர் நீதிமன்றத்தில் கோரியிருந்தார்.
ஆனால், அவருக்கு நிவாரணம் வழங்க மறுத்த உயர் நீதிமன்றம் மதிப்பெண் சலுகை வழங்குவது என்பது மாநில அரசின் கொள்கை தொடர்புடைய விவகாரம். அதில் நீதிமன்றம் தலையிடாது. இடஒதுக்கீடு அடிப்படையில் தேர்வு மதிப்பெண் சலுகை வழங்கும்படி ஒரு மாநிலத்துக்கு நீதிமன்றத்தால் உத்தரவிட முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
அந்த உத்தரவு சரியானது என்று உச்ச நீதிமன்றம் கருதுகிறது. இதுபோன்ற விவகாரத்தில் மாநில அரசுதான் முடிவு செய்ய வேண்டும். நீதிமன்றம் அதன் வரம்பை மீறிக் கொண்டு இந்த விவகாரத்தில் உத்தரவு பிறப்பிக்க முடியாது. அதனால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என்று நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டனர்.
முன்னதாக, இந்த வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், "ஆசிரியர் தகுதித் தேர்வில் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டின்படி மதிப்பெண் வழங்க முடியாது என தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீத மதிப்பெண் பெற்றால்தான் ஆசிரியர் வேலைவாய்ப்பு என்ற கொள்கையில் தமிழக அரசு சமரசம் செய்து கொள்ள விரும்பவில்லை' என்று கூறியிருந்தது. அதை பரிசீலித்த உச்ச நீதிமன்றம் மேற்கண்ட தீர்ப்பை வெள்ளிக்கிழமை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா, கருணாநிதி கொடிய குற்றவாளிகள்: மாணவி அதிரடி கடிதம்!



டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் சட்டவிரோதமாக போதைப்பொருள் விற்று தமிழக மக்களை நாசப்படுத்திவரும் தமிழக முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு ஒரு சட்டமாணவி எழுதும் பகிரங்கக் கடிதம்.

நாள்: 06.12.2013

அனுப்புநர்: ஆ.நந்தினி, நான்காம் ஆண்டு பி.ஏ.பி.எல், அரசு சட்டக்கல்லூரி, மதுரை-625020.

பெறுநர்: செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்கள், தமிழக முதல்வர் & அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர், வேதி நிலையம், 81/36 போயஸ் கார்டன், சென்னை-600086.

தமிழக முதல்வர் அவர்களுக்கு, வணக்கம்.

மதுவால் அப்பாவைப் பறிகொடுத்த 100 மாணவர்களோடு உங்களை நேரில் சந்திக்க நேரம் கேட்டு கடந்த 01.11.2013 அன்று கடிதம் எழுதியிருந்தேன். இதற்கு தங்களிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை.

"ஒரு அரசமைப்பு எவ்வளவு உயர்ந்ததாக இருந்தபோதிலும் அதை செயல்படுத்துபவர்கள் மோசமானவர்களாக இருந்தால் அந்த அரசமைப்பும் மோசமாகிவிடும்"- என அரசியல்சாசன சிற்பி அண்ணல் அம்பேத்கர் சொன்னது யாருக்குப்பொருந்துகிறதோ இல்லையோ நிச்சயமாக உங்களுக்கும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கும் 100% பொருந்தும். நீங்கள் இருவரும் தானே தமிழக மக்களைத் திட்டமிட்டு குடிக்கு அடிமைப்படுத்தி, பல லட்சம் குடும்பங்களை நாசப்படுத்திய குற்றவாளிகள்!

ஆம், நீங்கள் இருவரும் கொடிய குற்றவாளிகள் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. இப்படிச் சொல்வதற்காக நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதைச் சந்திக்கத் தயாராகவே இக்கடிதத்தை எழுதுகிறேன். எந்தக் குற்றமும் செய்யாத மூன்று கோவை வேளாண் கல்லூரி மாணவிகளை 2000 ஆவது ஆண்டு உங்களது அடியாட்கள் பேருந்தோடு பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திப் படுகொலை செய்தார்களே? அதை விடவா பெரிய தண்டனையை எனக்குத் தந்துவிட முடியும்?

நான் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது நிகழ்ந்த அந்தக் கோரச் சம்பவம் என் மனதில் ஆறாத வடுவாகப் பதிந்துவிட்டது. இன்றுவரை, அச்சம்பவத்துக்கு ஒரு வருத்தம் கூட நீங்கள் தெரிவிக்கவில்லை. இந்தளவுக்கு கொடூரமனம் படைத்தவராக இருப்பதால் தான் மதுவால் அப்பாவைப் பறிகொடுத்து அவதிப்படும் குழந்தைகளின் வேதனை உங்களுக்குப் புரியவில்லை.

சாராயத்தையும், ஊழல் பணத்தையும் வைத்து மக்களை அடிமையாக்கி அரசியல் செய்வதில் நீங்களும் கருணாநிதி அவர்களும் ஒன்று தான். திருமங்கலம், பென்னாகரம் இடைத்தேர்தலில் அவர் என்ன செய்தாரோ அதைத்தானே நீங்களும் ஏற்காட்டில் செய்திருக்கிறீர்கள்.

தமிழக முதல்வரே! டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் அன்றாடம் ஏராளமான குடும்பங்களின் சாபத்தையும் பாவத்தையும் நீங்கள் சேர்த்துக் கொண்டிருக்கிறீர்கள். மதுவிற்பனை அதிகரிக்க, அதிகரிக்க உங்களது பாவக்கணக்கும் அதிகரிப்பதை மறந்துவிடாதீர்கள். நிச்சயமாக, ஒருநாள் இதற்கெல்லாம் நீங்கள் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.

நீதிக்காக மன்னனையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்திய கற்புக்கரசி கண்ணகி வாழ்ந்த மண் இது. நீதியும் நியாயமும் இங்கு இன்னும் உயிரோடுதான் இருக்கிறது. பாலில் கலப்படம் செய்து விற்பவர்களுக்கு ஆயுள் தண்டனை தரவேண்டும் என சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளது. பாலில் கலப்படம் செய்தாலே ஆயுள் தண்டனை என்றால், மது என்னும் கொடிய விஷத்தை விற்று ஏராளமான மக்களைப் படுகொலை செய்யும் உங்களுக்கு என்ன தண்டனை தருவது? தூக்குதண்டனை கூடப் போதாது. அதையும் தாண்டி புதிதாக ஏதாவது தண்டனையை சட்டத்தில் சேர்க்க வேண்டும்.

சட்டத்தில் இருந்து தப்புவது உங்களுக்குக் கைவந்த கலையாக இருக்கலாம். ஆனால் கடவுளின் தீர்ப்பிலிருந்து உங்களால் என்றுமே தப்பிக்க முடியாது.

இப்படிக்கு,

ஆ.நந்தினி.

நகல்: 1. திரு.மு.கருணாநிதி அவர்கள்,முன்னாள் தமிழக முதல்வர். 2. தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள். 3. ஊடகங்கள். 4. தமிழக மக்களுக்கு..

- நந்தினி
thanks;inneram.