Saturday, December 14, 2013

கல்வி உதவித்தொகை பெற திறன் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: தேர்வுத்துறை அறிக்கை

8–ம் வகுப்பு மாணவர்கள் உதவித்தொகை பெற திறன் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் கீழ் படிப்புதவித்தொகை எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. உதவித்தொகை வழங்க மாணவர்களை தேர்வு செய்யும் பொருட்டு என்.எம்.எம்.எஸ். தேர்வு அனைத்து வட்டார அளவில் நடைபெறவுள்ளது. தேர்வு தேதி 22–2–2014 இத்தேர்வுக்கான விண்ணப்பங்களை 16–ந்தேதி முதல் 20–ந்தேதி வரை இத்துறையின் இணையதளம் வழியாக 16–ந்தேதி முதல் 20–ந்தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம்.

அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2013–2014 கல்வி ஆண்டில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ–மாணவியர் அவர்தம் பெற்றோரின் குடும்ப வருமானம் ஆண்டொன்றுக்கு ரூ.1,50,000–க்கு மிகாமல் இருக்கவேண்டும். இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க தாங்கள் பயிலும் பள்ளியின் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

தலைமை ஆசிரியர்கள் வெற்று விண்ணப்பங்களை எட்டாம் வகுப்பு பயின்று வரும் மாணவர்களிடம் கொடுத்து பெற்றோர் உதவியுடன் பூர்த்தி செய்தல் வேண்டும். புகைப்படம் ஒட்டி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேர்வர்கள் தாம் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் தேர்வுக் கட்டணம் ரூ.50 உடன் 25–12–2013–க்குள் ஒப்படைத்தல் வேண்டும்.

தலைமை ஆசிரியர் பூர்த்தி செய்யப்பட்ட அனைத்து விண்ணப்பங்களையும் www.tndge.in என்ற இணையதளம் மூலம் 23–ந்தேதி முதல் 31–ந்தேதிக்குள் பதிவு செய்தல் வேண்டும். இந்த தகவலை அரசு தேர்வுத்துறை இயக்குனர் கு.தேவராஜன் வெளியிட்டுள்ளார்.