Wednesday, December 11, 2013

விவாதத்திற்கு இதுவா தருணம்?

ஜம்மு காஷ்மீர் தொடர்பான 370-ஆவது சட்டப் பிரிவு மறு விவாதத்திற்கு உள்படுத்தப்பட வேண்டும் என்கிற குஜராத் முதல்வரும், பாஜகவின் பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடியின் அறிவிப்பு, பாஜக தலைமைக்கே அதிர்ச்சி அளித்திருப்பதில் வியப்பொன்றுமில்லை. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குத் தனி அந்தஸ்தையும், உரிமைகளையும் அளிக்கும் அரசியல் சட்டத்தின் இந்தப் பிரிவை அகற்ற வேண்டும் என்பது பாஜகவின் கொள்கை முழக்கங்களில் ஒன்றாக இருப்பதால், இந்தப் பிரச்னையில் மாற்றுக் கருத்துக்கோ விவாதத்திற்கோ அவசியமே இல்லை என்கிற பாஜக தலைமையின் அறிவிப்பு எதிர்பார்த்த ஒன்றுதான்.
இந்தியாவுடனான இணைப்புக்கு ஜம்மு காஷ்மீர் தொடர்பான அரசியல் சட்டப் பிரிவு 370 தான் அடிப்படை. இந்த சட்டப் பிரிவின்படி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், இந்தியாவின் ஏனைய பகுதிகளில் வசிப்பவர்கள் சொத்துகளை வாங்கவோ, குடியேறவோ முடியாது. ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் குடியேறவும், சொத்துரிமை பெறவும் முடியும் எனும்போது, அங்கே இந்தியாவின் ஏனைய பகுதிகளில் வசிப்பவர்கள் குடியேற முடியாது என்பது எப்படி சரி என்பதுதான் 370-ஆவது சட்டப் பிரிவை அகற்றக் கோருபவர்களின் வாதம்.
ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ இணைவதா இல்லை தனி நாடாகத் திகழ்வதா என்கிற கேள்வி 1947 பிரிவினையின்போது எழுந்தபோது, ஜம்மு காஷ்மீருக்கு சட்டப் பிரிவு 370-இன் மூலம் தனி அந்தஸ்து தரப்படும் என்கிற வாக்குறுதியின் அடிப்படையில்தான் இந்திய யூனியனில் காஷ்மீர் இணைக்கப்பட்டது. இந்தியாவுடன் இணைவதன் மூலம், இந்தியாவின் பிற பகுதியினர் பெருவாரியாகக் குடியேறினால், "காஷ்மீரியத்' என்கிற தங்களது தனித்தன்மை அழிந்துவிடும் என்கிற நியாயமான பயம்தான் அவர்கள் இப்படியொரு தனி அந்தஸ்து கோருவதற்கு அடிப்படைக் காரணம்.
வட இலங்கையில் ராஜபட்ச அரசு சிங்களர்களைக் குடியேற்றுவதை நாம் எதிர்க்கிறோம். ஏன்? அங்கே தமிழினம் அழிக்கப்படுவதற்கும், அவர்களது உரிமைகள் பறிக்கப்படுவதற்கும் அது வழிகோலும் என்பதால்தான். அதேபோல, இந்தியாவின் பிற பகுதியினர் இங்கே குடியேறாதீர்கள் என்கிறார்கள் காஷ்மீர் மக்கள். பிற பகுதியினரின் குடியேற்றத்தால் தங்களது தனித்தன்மை அழிந்துவிடும் என்கிற அச்சத்தில் இருக்கும் நியாயத்தை ஏற்றுக்கொள்ளும் அதேநேரத்தில், அதே காஷ்மீரியத்துக்குச் சொந்தக்காரர்களான இந்து காஷ்மீரி பண்டிட்டுகளை அவர்களது சொத்துகளையும் வீடுகளையும் அபகரித்துக்கொண்டு விரட்டியடித்த அநியாயத்தை நாம் எப்படி ஏற்றுக் கொள்வது? சட்டப் பிரிவு 370 என்று சொன்னாலே ரத்தக் கொதிப்பு அதிகரிக்கும் பிரிவினைவாதி கிலானி போன்றவர்கள் இந்தக் கேள்விக்கு பதிலளித்து விட்டல்லவா நியாயம் கேட்க வேண்டும்?
அரசியல் சட்டப் பிரிவு 370ஐ அகற்றுவதற்கு காஷ்மீர் மக்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதில் நியாயம் இருக்கிறது. அவர்களது உரிமை பறி போகிறது; கலாசாரம் அழிந்துவிடும் அபாயம் இருக்கிறது என்பதால் எதிர்க்கிறார்கள். இங்கே இருப்பவர்கள் ஏன் எதிர்க்கிறார்கள்? காஷ்மீர் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும் என்று குரல் கொடுப்பவர்கள், மன்னர் மானியம் ஒழிக்கப்பட்டபோது அதை ஏன் ஆதரித்தார்கள்? அதுமட்டும் வாக்குறுதி இல்லையா? மத ரீதியான சகோதரத்துவம் என்று சொன்னால், அது தவறில்லையா? அப்படிப் பேசுபவர்கள், பாஜகவை மதவாதக் கட்சி என்று குற்றம் சாட்ட என்ன உரிமை இருக்கிறது?
சட்டப் பிரிவு 370 அகற்றப்படுவதால் சராசரி இந்தியர் யாரும் பயனடையப் போவதில்லை. காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள குங்குமப்பூ வயல்களையும், ஆப்பிள் தோட்டங்களையும் வாங்கத் துடிக்கும் பணக்காரர்களும், நிறுவனங்களும்தான் பயனடையப் போகிறார்கள் என்பதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
முறையாக தேர்தல் நடத்தப்பட்டபோதெல்லாம், தீவிரவாதிகளின் அச்சுறுத்தலையும் மீறி வாக்களித்து வரும் காஷ்மீர் மக்களின் எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கையையும் இதுவரை எந்தவொரு ஆட்சியும் பூர்த்தி செய்யவில்லை. முறையான சாலைகள், பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற எந்த வளர்ச்சிப் பணிகளும் காஷ்மீரில் நடக்கவில்லை. வளர்ச்சிப் பணிகள் முறையாக முடுக்கி விடப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளும், உறுப்பினர்களும் பொறுப்புடன் செயல்பட்டால், காஷ்மீரின் நிலைமை நிச்சயமாக மாறும். காஷ்மீருக்கான கோடிக்கணக்கான ரூபாய் ஒதுக்கீடை அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் ஒதுக்கிக் கொள்கிறார்கள். இதுதான் நிஜ நிலைமை.
ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லாவுக்கு ஒரு வேண்டுகோள். மாநில அதிகாரம் குறித்து நீங்கள் காட்டும் அக்கறையில் ஒரு விழுக்காடு அக்கறையையாவது, உங்கள் உள்ளாட்சிகளிடம் காட்டினால் பிரச்னை பாதி தீர்ந்துவிடும். நரேந்திர மோடிக்கு ஒரு கேள்வி - சட்டப் பிரிவு 370 ஐ விவாதிக்க இப்போது என்ன அவசியம்? இதனால் யாருக்கு என்ன லாபம்?

இது இழிநிலை!

தகவல் தொழில்நுட்பத்தின் இன்றியமையாத அங்கம் நூலகமாகத்தான் இருக்க முடியும். இணையதளத் தேடுதல் பொறி (சர்ச் எஞ்சின்) க்குள் நூலகங்கள் அடங்குகின்றன என்பது உண்மைதான் என்றாலும், புத்தகங்களின் தேவை என்பது இன்றியமையாததாகத்தான் உலகம் முழுவதும் தொடர்கிறது. இந்தியாவைப் பொருத்தவரை, புத்தகங்கள்தான் இன்றளவும் தகவல் பெட்டகங்களாகவும், அறிவுக் களஞ்சியங்களாகவும் திகழ்கின்றன.
÷ஆசிரியர்களின் தரம் குறைந்துவிட்டது. கல்வி தரமிழந்துவிட்டது என்கிற கூக்குரல் அதிகரித்து வருவதன் பின்னணியில், நூலகங்களின் செயல்பாடு திருப்திகரமாக இல்லாதது ஒரு முக்கியமான காரணம் என்பதை ஆட்சியாளர்கள் உணர மறுக்கிறார்கள். தரமான புத்தகங்களுடனான நவீனமயமாக்கப்பட்ட நூலகங்கள் செயல்படுமேயானால், ஆசிரியர்களின் தகுதிக் குறைவோ, கல்வியில் தரக்குறைவோ கணிசமாக ஈடுகட்டப்பட்டுவிடும்.
÷இந்திய நூலகத் துறையின் தந்தை என்று போற்றப்படும் எஸ்.ஆர். ரங்கநாதன் நூலக அறிவியலுக்கான ஐந்து அடிப்படைச் சட்டங்களை உருவாக்கி இருக்கிறார். நூலகத்தில் இருக்கும் ஒவ்வொரு புத்தகமும் அவசியமான, பயன்பாட்டுக்குரிய புத்தகமாக இருப்பது; நூலகத்தை பயன்படுத்தும் ஒவ்வொரு வாசகனின் தேவைக்கும் ஏற்ற புத்தகங்கள் இருப்பது; நூலகத்திலுள்ள ஒவ்வொரு புத்தகத்திற்கும் ஏதாவது ஒரு வாசகன் இருப்பது;  எளிதில் வாசகர்கள் தங்களது தேவைக்கேற்ற புத்தகத்தைத் தேடி எடுக்கும் விதத்தில் புத்தகங்கள் வரிசைப்படுத்தப்படுவது; புத்தகங்களும், தகவல்களும், தொழில்நுட்ப வளர்ச்சியும் காலத்திற்கும் தேவைக்கும் ஏற்றாற்போல வளர்ச்சி காண்பது என்பவைதான் அவை.
÷மேலே குறிப்பிட்ட ஐந்து அடிப்படை இலக்கணங்களும் பொருந்திய நூலகங்கள் இந்தியாவில் எத்தனை இருக்கின்றன என்று கேட்டால், ஒருவேளை வெளிநாட்டுத் தூதரகங்களின் நூலகங்களைக் குறிப்பிட முடியுமே தவிர, இந்திய நூலகங்கள் எதுவுமே இந்த இலக்கணத்தில் பொருந்தியதாக இல்லை என்பதுதான் சோகமான உண்மை.
÷மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் நூலகங்களிலும் சரி, மாநில அரசுகளின் பராமரிப்பில் உள்ள நூலகங்களிலும் சரி, அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புத்தகக் குவியலில் தரமான, வாசகர்களின் தேவைக்கேற்ற புத்தகங்கள் 25 விழுக்காடு இருந்தாலே அதிகம். நூலகத் துறை புத்தகங்கள் பெறுவதற்கே அரசியல் தலையீடும், சிபாரிசும், கமிஷனும் வேண்டும் என்கிற நிலைமை ஏற்பட்டு விட்டிருப்பதால், பழைய புத்தகக் கடைகளில் எடைக்குப் போட வேண்டியவை எல்லாம் மத்திய, மாநில அரசுகளின் நூலகங்களில் இடம்பிடித்து விடுகின்றன.
÷கடந்த வருடப் புள்ளிவிவரப்படி இந்தியாவில் தனியார் மற்றும் அரசுக் கல்லூரிகள் 35,539. இந்தக் கல்லூரிகளில் எத்தனை கல்லூரிகள் முறையாக நூலகங்களைப் பராமரிக்கின்றன என்று பார்த்தால் 30 விழுக்காடு கல்லூரிகள்கூடத் தேறாது. அது மட்டுமல்ல, பெருவாரியான கல்லூரி நூலகங்களில் முறையான தேர்ச்சி பெற்ற நூலகர்கள் நியமிக்கப்படுவதே கிடையாது. பல்கலைக்கழக மானியக் குழு மேற்பார்வைக்கு வரும்போதுதான், எங்கிருந்தாவது பயிற்சி பெற்ற நூலகரை பெயருக்கு கண்ணில் காட்டுவார்கள். நன்கொடையும், கல்விக் கட்டணமும் பெறும் தனியார் கல்லூரிகளில்
நூலகங்கள் முறையாகப் பராமரிக்கப்படாமல் இருப்பதும், தேர்ச்சி பெற்ற நூலகர்கள் நியமிக்கப்படாமல் இருப்பதும் என்ன நியாயம்?
÷தனியார் கல்லூரிகள் கிடக்கட்டும். அரசுக் கல்லூரிகளிலேயேகூட முறையான நூலகங்களும், நூலகர்களும் இல்லாத நிலைதான் தொடர்கிறது. தமிழகத்திலுள்ள 62 அரசுக் கல்லூரிகளில் 44 கல்லூரிகளில் கடந்த 20 ஆண்டுகளாக முறையான பயிற்சியும் தேர்ச்சியும் பெற்ற நூலகர்கள் கிடையாது. கல்லூரி நூலகங்களுக்காக, தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் கடந்த மார்ச் மாதம் தேர்வு செய்யப்பட்ட 28 பேர் இன்னும் பணி ஆணைக்காகக் காத்திருக்கிறார்கள்.
÷தமிழகத்தில் மட்டும்தான் இந்த நிலைமை என்று எண்ணிவிட வேண்டாம். இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களிலும் நிலைமை இதுதான்.  தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி நூலகங்களிலும் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது. ஆசிரியர்களின் தரம் குறைந்தாலும், கல்வியின் தரம் குறையாமல் இருக்க வேண்டுமானால் நவீனமயமாக்கப்பட்ட, தரமான நூலகங்களும், அவற்றைப் பராமரிக்க தேர்ச்சி பெற்ற நூலகர்களும் இருந்தாக வேண்டும். அரசுக் கல்லூரிகளில் மட்டுமல்ல, தமிழகத்தில் இயங்கும் அத்தனை தனியார் கல்லூரிகளிலும் முறையாக நவீனமயமாக்கப்பட்ட நூலகங்களும், அதைப் பராமரிக்க நூலகர்களும் இருப்பதை அரசு உறுதிப்படுத்துவது அவசியம்!

ராணுவமும் நிர்வாகமும்!

மக்களாட்சி நடைபெறும் சுதந்திர நாடுகளில் எப்போதுமே, அரசியல் தலைமைக்குக் கட்டுப்பட்டதாகத்தான் ராணுவம் இருந்து வரும். மன்னராட்சி முறையிலும், சர்வாதிகார ஆட்சிகளிலும்கூட இதுதான் நடைமுறை. ராணுவமே ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்போதுதான், ராணுவத் தளபதியே அரசியல் தலைமையை ஏற்றுக்கொண்டு நிர்வாகம் நடத்துவது சாத்தியம்.
இந்தியாவைப் பொருத்தவரை, இதுவரை அரசுக்கும் ராணுவத்திற்கும் இடையில் எந்தவித கருத்து வேறுபாடுக்கும் இடமில்லாமல் உறவு சுமுகமாகவே தொடர்ந்து வருகிறது. முப்படைகளின் தளபதிகளும், உயர் அதிகாரிகளும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைமைக்குக் கட்டுப்பட்டு மரியாதைக் கொடுக்கத் தயங்குவதில்லை என்றாலும், அவர்களால் ராணுவ அமைச்சகத்தின் நிர்வாகத் தலைமையில் இருக்கும் இந்திய அரசுப் பணி அதிகாரிகளின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நிர்வாகத்திற்கும் ராணுவத்திற்கும் இடையேயான உறவு என்பது எப்போதுமே சுமுகமாக இருந்ததில்லை என்பதுடன், கருத்து வேறுபாடுகளும் அதிகாரப் போட்டியும் நீண்ட நாள்களாகவே காணப்படுகின்றன.
பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் ராணுவம் வருவதால், இந்திய அரசுப்பணி அதிகாரிகள், ராணுவ அதிகாரிகளை - ஏன், ராணுவத் தலைமையையேகூட - தங்களுக்கு நிகரானவர்களாகக் கருதாமல் இருப்பதுதான் இதற்கு முக்கியக் காரணம். ஊதியப் பிரச்னையும் கருத்து வேறுபாட்டுக்கு இன்னொரு காரணம். ராணுவ அதிகாரிகளுக்கு, இந்திய அரசுப் பணி அதிகாரிகளுக்கு நிகரான சம்பளம், சலுகைகள் போன்றவை அளிக்கப்படுவதில்லை என்கிற மனக்குமுறல் ராணுவ அதிகாரிகளுக்கு எப்போதுமே உண்டு.
இந்தியா சுதந்திரமடைந்தபோது, "பீல்ட் மார்ஷல்' கரியப்பா முப்படைகளின் தளபதியாக நியமிக்கப்பட்டார். 1953-இல் அவர் ஓய்வுபெற்ற பிறகு ராணுவக் கூட்டுத் தலைமை என்பது கைவிடப்பட்டது. முப்படைகளுக்கும் தன்னிச்சையான அதிகாரங்களுடன் தளபதிகள் நியமிக்கப்பட்டனர். வங்கதேசப் போருக்குப் பிறகு அன்றைய ராணுவத் தளபதியாக இருந்த சாம் மானெக்ஷா 1973-இல் பீல்ட் மார்ஷலாக நியமிக்கப்பட்டார் என்றாலும், அவருக்குப் பிறகு கூட்டுத் தலைமை முறை தொடரவில்லை.
ஒரு கட்சி ஆட்சி முறைக்கு முற்றுப்புள்ளி விடுத்ததும், மக்கள் செல்வாக்குள்ள பலமான அரசியல் தலைமை ஏற்படாததும், சர்வ வல்லமை பொருந்திய ராணுவ அதிகாரியாகக் கூட்டுத் தலைமைக்குப் பொறுப்பேற்பவரை மாற்றிவிடக்கூடும் என்பதால், அரசியல் தலைமை முப்படைகளையும் பிரித்தே வைத்திருந்தது.
சமீபகாலமாக, முப்படைகளுக்கும் பாதுகாப்பு அமைச்சகத்திற்கும் இடையே சுமுகமாக உறவு இல்லாமல் இருப்பதால், நிர்வாக ரீதியான சிக்கல்களும், ராணுவம் தொடர்பான தேவைகள் பல முடங்கிக் கிடப்பதும் அதிகரித்து விட்டிருக்கின்றன.
தற்போதைய ராணுவத்தின் தலைமை தளபதியான விக்ரம் சிங்கை, முப்படைத் தளபதிகள் குழுவின் தலைவராக அரசு அறிவிக்க இருக்கிறது. ராணுவத்தின் தலைமைப் பொறுப்பை வகிப்பதுடன், முப்படைகளின் சார்பில் அரசுடன் கலந்தாலோசித்து பாதுகாப்புப் படைகளின் தேவைகளுக்கும், பிரச்னைகளுக்கும் தீர்வு காணும் பொறுப்பு அவருக்குத் தரப்பட்டிருக்கிறது.
அரசின் திட்டப்படி ஜெனரல் விக்ரம் சிங், நான்கு நட்சத்திரத் தகுதியுள்ள தளபதியாகத் தொடர்வதுடன், முப்படைத் தளபதிகள் அடங்கிய குழுவுக்குத் தலைவராகவும் செயல்படுவார் என்கிறது பாதுகாப்பு அமைச்சகம் தயாரித்திருக்கும் குறிப்பு. அவருக்கு, ஆலோசனை வழங்கும் பொறுப்பு தரப்பட்டிருக்கிறதே தவிர, விமான, கடற்படைகளின் செயல்பாடுகளில் தலையிடவோ, ஆணையிடவோ அதிகாரம் தரப்படவில்லை. இந்த புதிய பொறுப்பின் செயல்பாடும், அதிகார வரம்பும் எப்படி இருக்கும் என்பதை நடைமுறையில்தான் கண்டறிய வேண்டும்.
இதனால் எல்லாம் ராணுவத்திற்கும் நிர்வாகத்திற்கும் இடையேயான பிரச்னைகளும் கருத்து வேறுபாடுகளும் தீர்ந்துவிடப் போவதில்லை. பாதுகாப்பு அமைச்சக செயலருக்கும், முப்படைத் தளபதிகளின் குழுத் தலைவருக்கும் இடையேயான அதிகார நிலை என்ன? அவர்கள் சம அந்தஸ்து உடையவர்களா, இல்லையென்றால், யார் மற்றவரைவிட அதிகாரம் பெற்றவர்? இருவரும் சந்தித்தால் யார் யாருககு "சல்யூட்' செய்வது என்பது போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு காணாதவரை, ராணுவத்திற்கும் நிர்வாகத்திற்கும் இடையே சுமுகமான உறவு ஏற்படப் போவதில்லை.
இந்திய அரசுப் பணி அதிகாரிகள், ராணுவத் தளபதிகளைத் தங்களுக்குக் கீழானவர்களாகவே கருதுகிறார்கள். கருதுவார்கள். அந்த மன அடைப்பு அகற்றப்படாதவரை, சுமுக உறவு சாத்தியம் என்று தோன்றவில்லை! இந்த நிலைமை தொடரும் வரை அரசியல் தலைமைக்கு ஆபத்தில்லை என்று ஆட்சியாளர்கள் கருதுவதால் மாற்றம் ஏற்படும் என்றும் தோன்றவில்லை!

கர்மவீரர் நெல்சன் மண்டேலா

உலகில் பல்லாயிரம் கோடி மக்கள் வாழ்ந்து மறைகிறார்கள். ஆனால், ஒரு சிலர் மட்டுமே மாற்றங்களுக்குக் காரணமாயிருக்கிறார்கள்; மனித சமுதாயத்தின் சரித்திரத்தில் தாக்கம் ஏற்படுத்துகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு சிலரில், ஒருவர் நம்முடன் வாழ்ந்தார், இப்போது மறைந்துவிட்டார்.
நெல்சன் மண்டேலாவின் மரணம் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். கடந்த சில ஆண்டுகளாகவே முதுமையும், உடல்நலக் குறைவும் அவரை நடைப்பிணமாக்கி விட்டிருந்தது. ஆனாலும் கூட, இப்படி ஒரு மாமனிதர் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது, லட்சியவாதிகளுக்கும் சுயமரியாதை, சுதந்திரம் போன்ற கொள்கைகளில் நம்பிக்கை கொண்டோருக்கும் ஆறுதலாகவும் ஊக்கமாகவும் இருந்தது. இனி நாம், அண்ணல் காந்தியடிகளை நினைவில் நிறுத்தி செயல்படுவதுபோல, எங்கெல்லாம் இனவெறி எழுகிறதோ, எங்கெல்லாம் சுதந்திரம் பறிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் நெல்சன் மண்டேலாவை முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட்டாக வேண்டும்.
அண்ணல் காந்தியடிகளைத் தனது முன்னோடியாகக் கொண்டு, அவர் விட்ட இடத்திலிருந்து தனது பணியைத் தொடங்கியவர் நெல்சன் மண்டேலா. தென்னாப்பிரிக்க இனவெறி அரசுக்கு எதிராக அவர் நடத்தியது ஆயுதப் போராட்டமல்ல. அண்ணலின் வழியிலான அமைதிப் போராட்டம், அகிம்சைப் போராட்டம். 27 ஆண்டுகள் தனிமைச் சிறையில் அடைபட்டுக் கிடந்த நெல்சன் மண்டேலாவால், கருப்பர் இன மக்களின் சுதந்திர வேட்கை தணிந்துவிடாமல் பாதுகாக்க முடிந்தது என்றால், அவர் மீது அந்த மக்கள் வைத்திருந்த நம்பிக்கையும், அவர் கொண்ட லட்சியத்தில் இருந்த பிடிப்பும்தான் காரணம்.
ஐந்து ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் இல்லாமல் போனால், அடையாளம் தெரியாதவர்களாகிவிடும் அரசியல் தலைவர்களுக்கு மத்தியில், 27 ஆண்டுகள் போராட்டக் களத்திலிருந்தும், மக்கள் மத்தியிலிருந்தும் அகற்றப்பட்டு, தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டபோதும், அந்தத் தலைவனால் உயிர்ப்புடன், மன உறுதி தளராமல், கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்க முடிந்தது என்பதுதான் நெல்சன் மண்டேலாவை ஏனைய தலைவர்களிலிருந்து அகற்றி நிறுத்துகிறது. அண்ணாந்து பார்க்க வைக்கிறது.
1994இல் தென்னாப்பிரிக்காவில் இனவெறி ஆட்சி அகற்றப்பட்டு, குடியரசு அமைந்தவுடன் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நெல்சன் மண்டேலா, தன்னை நிரந்தரத் தலைவராக அறிவித்துக் கொள்ளவில்லை. இரண்டாம் முறை போட்டியிட மறுத்துவிட்டார். அடுத்த ஐந்து ஆண்டுகள் கட்சித் தலைவராக மட்டுமே இருந்தவர், 2004இல் பொது வாழ்விலிருந்தே விலகிக் கொண்டுவிட்டார். தான் கொண்ட குறிக்கோளை அடைந்து, தென்னாப்பிரிக்கா நிரந்தரமாகத் தன்னுரிமை பெற்ற குடியரசாகத் தொடர்வதை உறுதிசெய்துவிட்டு, கடமை முடிந்தது என்று நடையைக் கட்டிய கர்மவீரர் நெல்சன் மண்டேலா.
27 ஆண்டு காராகிருகவாசம் அனுபவித்தபோது, கட்சியைக் கட்டிக் காத்தவர், போராட்டத்தின் வீரியம் குறையாமல் பாதுகாத்தவர் அவரது மனைவி வின்னி மண்டேலா. தென் ஆப்பிரிக்காவில் குடியரசு ஆட்சி அமைந்தபோது அதில் அமைச்சராகப் பொறுப்பும் ஏற்றார். அமைச்சரான தனது மனைவி அதிகார போதை தலைக்கேறி செய்த ஊழல்கள் வெளிவந்தபோது, சற்றும் தயங்காமல், அதை மறைக்க முயலாமல் சட்டம் தனது கடமையைச் செய்யப் பணித்தவர் நெல்சன் மண்டேலா.
இதனால் அவரது குடும்ப வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தனிமைச் சிறையிலிருந்து விடுதலையானதும் தனிமை வாழ்க்கை வாழ வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அவர் நினைத்திருந்தால் தனது மனைவியைப் பாதுகாத்திருக்க முடியும். தவறுகளை மன்னித்திருக்க முடியும். பொது வாழ்க்கையில் நேர்மையும் தூய்மையும் பற்றி பலரும் பேசுவார்கள். நெல்சன் மண்டேலா வாழ்ந்து காட்டினார்.
அண்ணல் காந்தியடிகளைப் போல, அவரும் வாரிசு அரசியலுக்கு வழிகோலவில்லை. தனது குழந்தைகளை முன்னிலைப்படுத்தவில்லை என்பது மட்டுமல்ல, தனது அரசியல் வாரிசு என்று யாரையும் அறிவிக்கவில்லை, பதவிக்குப் பரிந்துரைக்கவும் இல்லை.
ஒரு சமுதாயப் போராளி, அரசியல் தலைவர், லட்சிய புருஷன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இத்தனை நாளும் நம்மிடையே வாழ்ந்தவர் நெல்சன் மண்டேலா. நம்மில் பலர், குறிப்பாக அரசியல்வாதிகளில் பலர், அவரைப் பற்றித் தெரிந்து வைத்திருக்கவில்லை. இப்போது மரணமடைந்து விட்டார். மரணமாவது அவரைப் பற்றிய உண்மைகளை அவர்களுக்கு உணர்த்தட்டும்.
நெல்சன் மண்டேலா பற்றி சொல்வதாக இருந்தால் இதுதான் சொல்ல முடியும் - "இனியொருவர் நிகரில்லை உனக்கு!'

தப்பாட்டம்!

கடந்த சில ஆண்டுகளாகவே, சின்னச் சின்ன நிர்வாக ரீதியிலான பிரச்னைகளில்கூட நீதிமன்றம் தலையிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. நீதித்துறையின் நேரத்தை அரசியல் சட்டப் பிரச்னைகளும், அரசின் தவறான நிர்வாக முடிவுகளுக்கு எதிரான வழக்குகளும் ஆக்கிரமித்துக் கொள்வது ஆரோக்கியமான ஒன்றல்ல.
பலமான, பொறுப்பான எதிர்க்கட்சி இருக்குமானால், ஆட்சியாளர்களின் தவறான ஆணைகளுக்கு அடிபணிய மறுக்கும் நேர்மையான அதிகார வர்க்கம் இருக்குமானால், மக்கள் எதற்கெடுத்தாலும் நீதிமன்றத்தை நாட வேண்டிய அவசியம் ஏற்படாது.
இதற்கு இரண்டு காரணங்கள். ஆட்சியாளர்கள் முறையாக நிர்வாகத்தை நடத்தாமல் இருப்பதும், சுய ஆதாயத்திற்காகவோ, விருப்பு வெறுப்புகளினாலோ நிர்வாக முடிவுகளை எடுப்பதும் முதல் காரணம். கல்வி அறிவு அதிகரித்திருப்பதால், விழிப்புணர்வு அதிகரித்திருக்கும் மக்கள், அரசியல்வாதிகளின் நிர்வாகத் தவறுகளுக்கு நியாயம் கேட்க நீதிமன்றங்களின் கதவுகளைத் தட்டத் தொடங்கி இருப்பது இரண்டாவது காரணம்.
நீதிமன்றம் தலையிடத் தேவையில்லாத விளையாட்டு பற்றிய ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கும் கருத்து நிர்வாகம் தொடர்பான ஒன்று. 120 கோடி மக்கள் தொகையுள்ள இந்தியா உலக அரங்கில் விளையாட்டில் மிகமிகப் பின்தங்கிய நாடுகளில் ஒன்றாகத் திகழும் அவலத்தை நினைத்து மனம் வெதும்பும் பலரும், உச்சநீதிமன்றத்தின் கருத்தை கரகோஷம் எழுப்பி வரவேற்பார்கள்.
"விளையாட்டுடன் எந்தவிதத் தொடர்போ, அதுபற்றிய சாதாரண அறிவோகூட இல்லாதவர்கள் வெவ்வேறு விளையாட்டு அமைப்புகளின் தலைமைப் பொறுப்பில் இருப்பதும், அந்த விளையாட்டுகளின் வளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதும், வேதனைக்குரிய நிலைமை' என்று ஹாக்கி கூட்டமைப்பு தொடர்பான ஒரு வழக்கு விசாரணையில் நீதிபதிகள் டி.என். தாக்கூர், ஜே. செலமேஷ்வர் இருவரின் அமர்வு கருத்துத் தெரிவித்திருக்கிறது. பல்வேறு விளையாட்டுக் கூட்டமைப்புகளின் தலைமைப் பொறுப்பில் அரசியல்வாதிகளும், தொழிலதிபர்களும் இருப்பது அந்த விளையாட்டுகளின் மேம்பாட்டிற்கு ஊறு விளைவிக்கின்றனவே தவிர உதவவில்லை என்றும், அந்தந்த விளையாட்டு தொடர்பான வீரர்கள்தான் சம்பந்தப்பட்ட விளையாட்டுக் கூட்டமைப்புகளின் தலைமைப் பொறுப்பில் இருக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள்.
கடந்த பல ஆண்டுகளாகவே, அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களின் தயவில்தான் விளையாட்டு வீரர்கள் இந்திய அணியில் இடம்பெறவும், விளையாடவும் முடிகிறது. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் வந்தாலும் வந்தது, எல்லா அரசியல்வாதிகளும் பணம் சம்பாதிப்பதற்கு விளையாட்டும் ஒரு வழி என்பதைப் புரிந்து கொண்டுவிட்டனர்.
"விளையாட்டு வீரர்களுக்கு விளையாடத்தான் தெரியும். நிர்வாகம் தெரியாது. அதனால் இதுபோன்ற அமைப்புகளின் தலைமைப் பொறுப்பில் விளையாட்டின் மீது ஆர்வமுள்ள புரவலர்கள் இருப்பதுதான் சரி' என்பது அரசியல்வாதி, தொழிலதிபர் தரப்பினரின் வாதம். அப்படிப் பார்த்தால், தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்கள் நிர்வாகம் தெரிந்தவர்களா என்ன? அதிகாரிகளின் உதவியுடன் அவர்கள் ஆட்சி நடத்துவதுபோல, தலைமைப் பொறுப்பில் அமரும் அந்தந்தத் துறை சார்ந்த விளையாட்டு வீரர்களும் அதிகாரிகளின் துணையுடன் அந்தந்த அமைப்புகளை நிர்வகித்துக் கொள்ள முடியுமே.
கிராமப்புறப் பள்ளி அளவிலிருந்து, விளையாட்டில் நாட்டமுள்ள குழந்தைகளை முறையாக அடையாளம் கண்டு, தகுந்த பயிற்சியும் ஊக்கமும் அளித்து தயார்படுத்தினால், சர்வதேசப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை இந்தியா அள்ளிக் குவிக்கும். அதற்கு, விளையாட்டு அமைப்புகளிலிருந்து அரசியல்வாதிகளும், தொழிலதிபர்களும் அகற்றி நிறுத்தப்படுவதுதான் முதல் படி.
விளையாட்டுத் துறை இந்திய அரசுப் பணி அதிகாரிகளால் முறையாக நிர்வகிக்கப்படுவதில்லை. விளையாட்டுடன் தொடர்பே இல்லாதவர்கள் அமைச்சர்களாகவும், துறை சார்ந்த அதிகாரிகளாகவும் நியமிக்கப்படுவது இதற்கு முக்கிய காரணம். போலி சான்றிதழ் பெறுவோரும், பெயர் கேள்விப்படாத விளையாட்டுகளில் தேர்ச்சி பெற்றோரும் எந்தவித கண்காணிப்போ, கட்டுப்பாடோ இல்லாமல் உயர் கல்வியிலும், அரசு வேலைவாய்ப்பிலும் விளையாட்டுக்கான ஒதுக்கீடுகள் பெறுவதைக்கூடக் கேள்வி கேட்க ஆளில்லாத நிலைமை.
விளையாட்டை நாம் விளையாட்டாக எடுத்துக் கொள்கிறோம். அரசியல்வாதிகளும், தொழிலதிபர்களும் பணம் காய்க்கும் மரமாக எடுத்துக்கொள்கிறார்கள். ஆகமொத்தம், விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையுடன் நாம் விளையாடிக் கொண்டிருக்கிறோம்!

ஓரினச்சேர்க்கை குறித்த ஐகோர்ட் உத்தரவு ரத்து; 377வது பிரிவு செல்லும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

புதுடில்லி: ஓரினச்சேர்க்கை, இந்திய கலாசாரத்துக்கும், இங்குள்ள மதங்கள் பின்பற்றும் கொள்கைகளுக்கும் எதிரானது. எனவே, ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது, சட்ட விரோதம். ஓரினச்சேர்க்கையை குற்றமாகக் கருதும், இந்திய தண்டனை சட்டத்தின், 377வது பிரிவு செல்லும் என, சுப்ரீம் கோர்ட், நேற்று அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. இதற்கு, ஓரினச் சேர்க்கையாளர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவானவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நம் நாட்டை பொறுத்தவரை, ஆணுடன் ஆண் அல்லது பெண்ணுடன் பெண், இயற்கைக்கு மாறான உறவில் ஈடுபடுவது, குற்றமாகக் கருதப்படுகிறது. நம் கலாசாரம் மற்றும் ஒழுக்க நடைமுறைகளுக்கு எதிரானதாகவும், இந்தச் செயல்கள் கருதப்படுகின்றன. இதனால், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே, ஓரினச்சேர்க்கை சட்ட விரோதம் என, சட்டம் இயற்றப்பட்டது. இதன்படி, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு, 377ன் படி, ஓரினச்சேர்க்கை சட்ட விரோதமானதாகவும், இந்த குற்றத்தில் ஈடுபடுவோருக்கு, அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வரை விதிக்கலாம் என்றும் கருதப்படுகிறது. ஆனால், கடந்த, 30 ஆண்டுகளில், இந்த விவகாரத்தில், சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள கலாசார மாற்றங்கள், இந்தியாவிலும் எதிரொலிக்கத் துவங்கியது. நம் நாட்டிலும், ஏராளமான ஓரினச்சேர்க்கையாளர்கள் மறைமுகமாக, உறவில் ஈடுபட்டு வந்தனர். நாளடைவில், தங்கள் உரிமைகளுக்காக, அவர்கள் உரிமைக் குரல் எழுப்பத் துவங்கினர்.


நாஸ் பவுண்டேஷன்:
கடந்த, 2001, மார்ச்சில், ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவாக போராடி வரும், நாஸ் பவுண்டேஷன் என்ற அமைப்பு, ஓரினச்சேர்க்கையை சட்டப்பூர்வமாக்க வேண்டும் எனக்கோரி, டில்லி ஐகோர்ட்டில், பொதுநல மனு தாக்கல் செய்தது. வழக்கின் விசாரணையின் போது, உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த பதில் மனுவில், ஓரினச்சேர்க்கையை தடை செய்யும் சட்டம், தொடர வேண்டும் என, கூறப்பட்டது. ஆனால், சுகாதார அமைச்சகம், அந்த சட்டத்தை தடை செய்ய வேண்டும் என்ற, மாறுபட்ட கருத்தை தெரிவித்தது. இதையடுத்து, 2009ல், இந்த வழக்கில், டில்லி ஐகோர்ட், முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்தது. அதில், வயதுக்கு வந்த இருவர், முழு சம்மதத்துடன், ஓரினச்சேர்க்கையில், தங்கள் அறைக்குள் ஈடுபடுவது தவறல்ல. இதை தடை செய்யும், இந்திய தண்டனை சட்டத்தின், 377வது பிரிவு ரத்து செய்யப்படுகிறது என, அதிரடியான தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்பு, நாடு முழுவதும், பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. மத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பெண்கள் நல அமைப்புகள் ஆகியோர், இந்த தீர்ப்புக்கு எதிராக குரல் கொடுத்தனர். ஆனால், தங்கள் உரிமைகளுக்காக நீண்ட நாட்களாக போராடி வந்த, ஓரினச்சேர்க்கையாளர்கள், இந்த தீர்ப்பை உற்சாகத்துடன் வரவேற்றனர். இந்த தீர்ப்பை எதிர்த்து, பா.ஜ.,வின் மூத்த தலைவரும், சமீபத்தில் காலமானவருமான, பி.பி.சிங்கால், அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம், உக்தல் கிறிஸ்டியன் கவுன்சில் மற்றும் ஏராளமான மத அமைப்புகள், சுப்ரீம் கோர்ட்டில், மேல்முறையீடு செய்தன. கடந்த சில ஆண்டுகளாக, இந்த வழக்கின் விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது. இந்த விசாரணைகளின் போது, ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவாக, மத்திய அரசு, பதில் மனு தாக்கல் செய்தது. அதில், ஓரினச்சேர்க்கையை குற்றமாகக் கருதும், இந்திய தண்டனை சட்டத்தின், 377வது பிரிவு, பிரிட்டிஷ் அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்டது. தற்போது, காலம் மாறி விட்டது. இந்த விஷயத்தில், இந்திய சமூகம், சகிப்புத் தன்மையை பின்பற்ற வேண்டும் என, தெரிவித்திருந்தது. இதையடுத்து, வழக்கின் விசாரணை முடிந்து, கடந்தாண்டு மார்ச்சில், தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், நீதிபதிகள், ஜி.எஸ்.சிங்வி, எஸ்.ஜே.முகோபாத்யாயா ஆகியோர் அடங்கிய, பெஞ்ச் இந்த வழக்கில், நேற்று, அதிமுக்கியத்துவமான தீர்ப்பை வழங்கியது.


தீர்ப்பில் கூறப்பட்டதாவது:
ஓரினச்சேர்க்கை, இருவரின் தனிப்பட்ட விஷயம் என்றும், வயதுக்கு வந்த இருவர், மனம் இசைந்து, மறைவிடத்தில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது குற்றமாகாது என்றும், டில்லி ஐகோர்ட் அளித்த தீர்ப்பு, ஏற்க தகுந்ததல்ல. இந்த விஷயத்தை, டில்லி ஐகோர்ட், மிக சாதாரண விஷயமாகக் கையாண்டதாகவே, இந்த கோர்ட் கருதுகிறது. ஓரினச்சேர்க்கை, இந்திய கலாசாரத்துக்கும், மதங்கள் பின்பற்றும் கொள்கைகளுக்கும், ஒழுக்க நடைமுறை
களுக்கும் விரோதமானது. எனவே, இந்திய தண்டனை சட்டத்தின், 377வது பிரிவு செல்லாது என, டில்லி ஐகோர்ட் அளித்த தீர்ப்பு, ரத்து செய்யப்படுகிறது. ஓரினச்சேர்க்கையை தடை செய்யும், சட்டப் பிரிவும், அந்த குற்றத்துக்கு, அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கலாம் என, கூறப்பட்டு உள்ள உத்தரவும் செல்லும்.


பார்லியில் சட்டம் அவசியம்:
இந்த விவகாரத்தை, மத்திய அரசு, மிக சாதாரணமாகவே கையாண்டுள்ளது, கண்டனத்துக்குரியது. அதிமுக்கியத்துவம் வாய்ந்த, இந்த விஷயத்தை, பார்லிமென்டில் விவாதித்து முடிவெடுக்காமல், நீதித் துறை மீது, மத்திய அரசு பழி சுமத்துவது, கண்டனத்துக்குரியது. சர்ச்சைக்குரிய சட்டத்தை திருத்துவது அல்லது நீக்குவதற்கு, பார்லிமென்டிற்கு மட்டுமே உரிமை உள்ளது. இந்த விஷயத்தில், பார்லி மென்ட் தான், முடிவெடுத்திருக்க வேண்டும். ஆனால், இந்த நிமிடம் வரை, இந்திய தண்டனை சட்டத்தின், 377வது பிரிவு, அமலில் உள்ளது. ஓரினச்சேர்க்கை போன்ற உறவுகளை, கோர்ட், சட்டப்பூர்வமாக்க முடியாது. எனவே, ஓரினச்சேர்க்கை சட்ட விரோதமானது. இவ்வாறு, நீதிபதிகள், தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர். சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு, கோர்ட் வளாகத்தில் கூடியிருந்த ஓரினச்சேர்க்கை ஆதரவாளர்களை சோகத்தில் ஆழ்த்தியது. பலர், கண்ணீர் விட்டு, கதறி அழுதனர். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை, மறுஆய்வு செய்யக்கோரி, சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதாகவும், அவர்கள் தெரிவித்தனர்.


ஐ.பி.சி., 377வது பிரிவு கூறுவது என்ன?
இந்திய தண்டனை சட்டத்தின், 377வது பிரிவு, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்டது. அதில், எவர் ஒருவர், இயற்கைக்கு மாறான வகையில், பெண்ணுடனோ, ஆணுடனோ, விலங்குகளுடனோ, உறவு வைத்துக் கொள்கிறாரோ, அவர், இந்திய தண்டனை சட்டத்தின், 377வது, பிரிவின்படி, குற்றவாளியாகிறார். அத்தகைய குற்றத்தில் ஈடுபடுவோருக்கு, ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும்; அபராதமும் விதிக்கப்படும்.


அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது:
ஓரினச்சேர்க்கையாளர்கள் கூறியதாவது: இந்திய அரசமைப்பு சட்டம், அனைவருக்கும், சம உரிமை வழங்கியுள்ளதோடு, கருத்து மற்றும் பேச்சு சுதந்திரமும் அளித்துள்ளது. சட்டத்தின் முன், அனைவரும் சமம் என, அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. அரசியலமைப்பு சட்டத்தின், 21வது பிரிவு, ஒவ்வொருவரின் பாதுகாப்பான வாழ்வுக்கும், தனி நபர் சுதந்திரத்துக்கும், உத்தரவாதம் அளிக்கிறது. எனவே, எங்களின் சுதந்திரத்தையும், உரிமைகளையும், எந்தவிதமான உத்தரவுகளின் மூலமும், பறிக்கக் கூடாது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.


என்ன செய்யப்போகிறது மத்திய அரசு?
சுப்ரீம் கோர்ட் உத்தரவு குறித்து, மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல் கூறியதாவது: ஓரினச்சேர்க்கை தொடர்பாக, சுப்ரீம் கோர்ட், அதன் கருத்தை தெரிவித்துள்ளது. இது, சுப்ரீம் கோர்ட்டுக்கு உள்ள அதிகாரம். நீதிபதிகள் அளித்த தீர்ப்பு குறித்து, நான் எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது. அதே நேரத்தில், இது தொடர்பாக, பார்லி.,யில், சட்டமியற்றும் அதிகாரம், அரசுக்கு உள்ளது. அரசு, அதன் கடமையைச் செய்யும். இவ்வாறு, கபில் சிபல் கூறினார்.

மக்கள் பிரதிநிதிகளின் கருத்து என்ன? ஐக்கிய ஜனதா தள எம்.பி., சிவானந்த் திவாரி கூறுகையில், டில்லி ஐகோர்ட் அளித்த தீர்ப்பு, சிறப்பானது; அறிவியல்பூர்வமானது. ஆனால், சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பை, அப்படி கருத முடியவில்லை, என்றார்.

திரிணமுல் காங்., - எம்.பி., டெரிக் ஓ பிரெய்ன் கூறுகையில், சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு, ஏமாற்றம் அளிக்கிறது. நாம், சுதந்திரமான உலகில் வாழ்கிறோம்; அதற்கு, தடை ஏற்படுத்தக் கூடாது, என்றார்.

காங்., - எம்.பி., மணிசங்கர் அய்யர் கூறுகையில், சட்டத்தின் முன், அனைவரும் சமம்; இதில், யாருக்கும் பாரபட்சம் காட்டக் கூடாது. மனிதர்களாக பிறந்த அனைவருக்கும், சம உரிமை வழங்க வேண்டும், என்றார்.


இது எங்களின் இயற்கையான உணர்வு
; ஓரினச்சேர்க்கையாளர்கள் ஆவேசம்: சுப்ரீம் கோர்ட் அளிக்கவுள்ள தீர்ப்பை எதிர்பார்த்து, ஏராளமான ஓரினச்சேர்க்கையாளர்கள், கோர்ட் வளாகத்தில், பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். தீர்ப்பு வெளியானதும், அவர்கள், கடும் ஏமாற்றம் அடைந்தனர். பலர், தங்கள் உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்தினர்.

அவர்கள் கூறியதாவது: ஓரினச்சேர்க்கையை தடை செய்யும் சட்டம், 1861ல், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், நிறைவேற்றப்பட்டது. இந்த காலத்துக்கு, இந்த சட்டம், பொருந்துமா? ஓரினச்சேர்க்கையாளராக, ஒரு குழந்தை பிறந்தால், அது குற்றமா? இது, எங்களின் இயற்கையான உணர்வு. எங்களின் உரிமைகளை தயவுசெய்து பறிக்க வேண்டாம். அதற்கான உரிமை, யாருக்கும் இல்லை. இவ்வாறு, அவர்கள் கூறினர்.