Wednesday, December 11, 2013

ராணுவமும் நிர்வாகமும்!

மக்களாட்சி நடைபெறும் சுதந்திர நாடுகளில் எப்போதுமே, அரசியல் தலைமைக்குக் கட்டுப்பட்டதாகத்தான் ராணுவம் இருந்து வரும். மன்னராட்சி முறையிலும், சர்வாதிகார ஆட்சிகளிலும்கூட இதுதான் நடைமுறை. ராணுவமே ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்போதுதான், ராணுவத் தளபதியே அரசியல் தலைமையை ஏற்றுக்கொண்டு நிர்வாகம் நடத்துவது சாத்தியம்.
இந்தியாவைப் பொருத்தவரை, இதுவரை அரசுக்கும் ராணுவத்திற்கும் இடையில் எந்தவித கருத்து வேறுபாடுக்கும் இடமில்லாமல் உறவு சுமுகமாகவே தொடர்ந்து வருகிறது. முப்படைகளின் தளபதிகளும், உயர் அதிகாரிகளும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைமைக்குக் கட்டுப்பட்டு மரியாதைக் கொடுக்கத் தயங்குவதில்லை என்றாலும், அவர்களால் ராணுவ அமைச்சகத்தின் நிர்வாகத் தலைமையில் இருக்கும் இந்திய அரசுப் பணி அதிகாரிகளின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நிர்வாகத்திற்கும் ராணுவத்திற்கும் இடையேயான உறவு என்பது எப்போதுமே சுமுகமாக இருந்ததில்லை என்பதுடன், கருத்து வேறுபாடுகளும் அதிகாரப் போட்டியும் நீண்ட நாள்களாகவே காணப்படுகின்றன.
பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் ராணுவம் வருவதால், இந்திய அரசுப்பணி அதிகாரிகள், ராணுவ அதிகாரிகளை - ஏன், ராணுவத் தலைமையையேகூட - தங்களுக்கு நிகரானவர்களாகக் கருதாமல் இருப்பதுதான் இதற்கு முக்கியக் காரணம். ஊதியப் பிரச்னையும் கருத்து வேறுபாட்டுக்கு இன்னொரு காரணம். ராணுவ அதிகாரிகளுக்கு, இந்திய அரசுப் பணி அதிகாரிகளுக்கு நிகரான சம்பளம், சலுகைகள் போன்றவை அளிக்கப்படுவதில்லை என்கிற மனக்குமுறல் ராணுவ அதிகாரிகளுக்கு எப்போதுமே உண்டு.
இந்தியா சுதந்திரமடைந்தபோது, "பீல்ட் மார்ஷல்' கரியப்பா முப்படைகளின் தளபதியாக நியமிக்கப்பட்டார். 1953-இல் அவர் ஓய்வுபெற்ற பிறகு ராணுவக் கூட்டுத் தலைமை என்பது கைவிடப்பட்டது. முப்படைகளுக்கும் தன்னிச்சையான அதிகாரங்களுடன் தளபதிகள் நியமிக்கப்பட்டனர். வங்கதேசப் போருக்குப் பிறகு அன்றைய ராணுவத் தளபதியாக இருந்த சாம் மானெக்ஷா 1973-இல் பீல்ட் மார்ஷலாக நியமிக்கப்பட்டார் என்றாலும், அவருக்குப் பிறகு கூட்டுத் தலைமை முறை தொடரவில்லை.
ஒரு கட்சி ஆட்சி முறைக்கு முற்றுப்புள்ளி விடுத்ததும், மக்கள் செல்வாக்குள்ள பலமான அரசியல் தலைமை ஏற்படாததும், சர்வ வல்லமை பொருந்திய ராணுவ அதிகாரியாகக் கூட்டுத் தலைமைக்குப் பொறுப்பேற்பவரை மாற்றிவிடக்கூடும் என்பதால், அரசியல் தலைமை முப்படைகளையும் பிரித்தே வைத்திருந்தது.
சமீபகாலமாக, முப்படைகளுக்கும் பாதுகாப்பு அமைச்சகத்திற்கும் இடையே சுமுகமாக உறவு இல்லாமல் இருப்பதால், நிர்வாக ரீதியான சிக்கல்களும், ராணுவம் தொடர்பான தேவைகள் பல முடங்கிக் கிடப்பதும் அதிகரித்து விட்டிருக்கின்றன.
தற்போதைய ராணுவத்தின் தலைமை தளபதியான விக்ரம் சிங்கை, முப்படைத் தளபதிகள் குழுவின் தலைவராக அரசு அறிவிக்க இருக்கிறது. ராணுவத்தின் தலைமைப் பொறுப்பை வகிப்பதுடன், முப்படைகளின் சார்பில் அரசுடன் கலந்தாலோசித்து பாதுகாப்புப் படைகளின் தேவைகளுக்கும், பிரச்னைகளுக்கும் தீர்வு காணும் பொறுப்பு அவருக்குத் தரப்பட்டிருக்கிறது.
அரசின் திட்டப்படி ஜெனரல் விக்ரம் சிங், நான்கு நட்சத்திரத் தகுதியுள்ள தளபதியாகத் தொடர்வதுடன், முப்படைத் தளபதிகள் அடங்கிய குழுவுக்குத் தலைவராகவும் செயல்படுவார் என்கிறது பாதுகாப்பு அமைச்சகம் தயாரித்திருக்கும் குறிப்பு. அவருக்கு, ஆலோசனை வழங்கும் பொறுப்பு தரப்பட்டிருக்கிறதே தவிர, விமான, கடற்படைகளின் செயல்பாடுகளில் தலையிடவோ, ஆணையிடவோ அதிகாரம் தரப்படவில்லை. இந்த புதிய பொறுப்பின் செயல்பாடும், அதிகார வரம்பும் எப்படி இருக்கும் என்பதை நடைமுறையில்தான் கண்டறிய வேண்டும்.
இதனால் எல்லாம் ராணுவத்திற்கும் நிர்வாகத்திற்கும் இடையேயான பிரச்னைகளும் கருத்து வேறுபாடுகளும் தீர்ந்துவிடப் போவதில்லை. பாதுகாப்பு அமைச்சக செயலருக்கும், முப்படைத் தளபதிகளின் குழுத் தலைவருக்கும் இடையேயான அதிகார நிலை என்ன? அவர்கள் சம அந்தஸ்து உடையவர்களா, இல்லையென்றால், யார் மற்றவரைவிட அதிகாரம் பெற்றவர்? இருவரும் சந்தித்தால் யார் யாருககு "சல்யூட்' செய்வது என்பது போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு காணாதவரை, ராணுவத்திற்கும் நிர்வாகத்திற்கும் இடையே சுமுகமான உறவு ஏற்படப் போவதில்லை.
இந்திய அரசுப் பணி அதிகாரிகள், ராணுவத் தளபதிகளைத் தங்களுக்குக் கீழானவர்களாகவே கருதுகிறார்கள். கருதுவார்கள். அந்த மன அடைப்பு அகற்றப்படாதவரை, சுமுக உறவு சாத்தியம் என்று தோன்றவில்லை! இந்த நிலைமை தொடரும் வரை அரசியல் தலைமைக்கு ஆபத்தில்லை என்று ஆட்சியாளர்கள் கருதுவதால் மாற்றம் ஏற்படும் என்றும் தோன்றவில்லை!

No comments: