தகவல் தொழில்நுட்பத்தின் இன்றியமையாத அங்கம் நூலகமாகத்தான் இருக்க முடியும். இணையதளத் தேடுதல் பொறி (சர்ச் எஞ்சின்) க்குள் நூலகங்கள் அடங்குகின்றன என்பது உண்மைதான் என்றாலும், புத்தகங்களின் தேவை என்பது இன்றியமையாததாகத்தான் உலகம் முழுவதும் தொடர்கிறது. இந்தியாவைப் பொருத்தவரை, புத்தகங்கள்தான் இன்றளவும் தகவல் பெட்டகங்களாகவும், அறிவுக் களஞ்சியங்களாகவும் திகழ்கின்றன.
÷ஆசிரியர்களின் தரம் குறைந்துவிட்டது. கல்வி தரமிழந்துவிட்டது என்கிற கூக்குரல் அதிகரித்து வருவதன் பின்னணியில், நூலகங்களின் செயல்பாடு திருப்திகரமாக இல்லாதது ஒரு முக்கியமான காரணம் என்பதை ஆட்சியாளர்கள் உணர மறுக்கிறார்கள். தரமான புத்தகங்களுடனான நவீனமயமாக்கப்பட்ட நூலகங்கள் செயல்படுமேயானால், ஆசிரியர்களின் தகுதிக் குறைவோ, கல்வியில் தரக்குறைவோ கணிசமாக ஈடுகட்டப்பட்டுவிடும்.
÷இந்திய நூலகத் துறையின் தந்தை என்று போற்றப்படும் எஸ்.ஆர். ரங்கநாதன் நூலக அறிவியலுக்கான ஐந்து அடிப்படைச் சட்டங்களை உருவாக்கி இருக்கிறார். நூலகத்தில் இருக்கும் ஒவ்வொரு புத்தகமும் அவசியமான, பயன்பாட்டுக்குரிய புத்தகமாக இருப்பது; நூலகத்தை பயன்படுத்தும் ஒவ்வொரு வாசகனின் தேவைக்கும் ஏற்ற புத்தகங்கள் இருப்பது; நூலகத்திலுள்ள ஒவ்வொரு புத்தகத்திற்கும் ஏதாவது ஒரு வாசகன் இருப்பது; எளிதில் வாசகர்கள் தங்களது தேவைக்கேற்ற புத்தகத்தைத் தேடி எடுக்கும் விதத்தில் புத்தகங்கள் வரிசைப்படுத்தப்படுவது; புத்தகங்களும், தகவல்களும், தொழில்நுட்ப வளர்ச்சியும் காலத்திற்கும் தேவைக்கும் ஏற்றாற்போல வளர்ச்சி காண்பது என்பவைதான் அவை.
÷மேலே குறிப்பிட்ட ஐந்து அடிப்படை இலக்கணங்களும் பொருந்திய நூலகங்கள் இந்தியாவில் எத்தனை இருக்கின்றன என்று கேட்டால், ஒருவேளை வெளிநாட்டுத் தூதரகங்களின் நூலகங்களைக் குறிப்பிட முடியுமே தவிர, இந்திய நூலகங்கள் எதுவுமே இந்த இலக்கணத்தில் பொருந்தியதாக இல்லை என்பதுதான் சோகமான உண்மை.
÷மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் நூலகங்களிலும் சரி, மாநில அரசுகளின் பராமரிப்பில் உள்ள நூலகங்களிலும் சரி, அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புத்தகக் குவியலில் தரமான, வாசகர்களின் தேவைக்கேற்ற புத்தகங்கள் 25 விழுக்காடு இருந்தாலே அதிகம். நூலகத் துறை புத்தகங்கள் பெறுவதற்கே அரசியல் தலையீடும், சிபாரிசும், கமிஷனும் வேண்டும் என்கிற நிலைமை ஏற்பட்டு விட்டிருப்பதால், பழைய புத்தகக் கடைகளில் எடைக்குப் போட வேண்டியவை எல்லாம் மத்திய, மாநில அரசுகளின் நூலகங்களில் இடம்பிடித்து விடுகின்றன.
÷கடந்த வருடப் புள்ளிவிவரப்படி இந்தியாவில் தனியார் மற்றும் அரசுக் கல்லூரிகள் 35,539. இந்தக் கல்லூரிகளில் எத்தனை கல்லூரிகள் முறையாக நூலகங்களைப் பராமரிக்கின்றன என்று பார்த்தால் 30 விழுக்காடு கல்லூரிகள்கூடத் தேறாது. அது மட்டுமல்ல, பெருவாரியான கல்லூரி நூலகங்களில் முறையான தேர்ச்சி பெற்ற நூலகர்கள் நியமிக்கப்படுவதே கிடையாது. பல்கலைக்கழக மானியக் குழு மேற்பார்வைக்கு வரும்போதுதான், எங்கிருந்தாவது பயிற்சி பெற்ற நூலகரை பெயருக்கு கண்ணில் காட்டுவார்கள். நன்கொடையும், கல்விக் கட்டணமும் பெறும் தனியார் கல்லூரிகளில்
நூலகங்கள் முறையாகப் பராமரிக்கப்படாமல் இருப்பதும், தேர்ச்சி பெற்ற நூலகர்கள் நியமிக்கப்படாமல் இருப்பதும் என்ன நியாயம்?
÷தனியார் கல்லூரிகள் கிடக்கட்டும். அரசுக் கல்லூரிகளிலேயேகூட முறையான நூலகங்களும், நூலகர்களும் இல்லாத நிலைதான் தொடர்கிறது. தமிழகத்திலுள்ள 62 அரசுக் கல்லூரிகளில் 44 கல்லூரிகளில் கடந்த 20 ஆண்டுகளாக முறையான பயிற்சியும் தேர்ச்சியும் பெற்ற நூலகர்கள் கிடையாது. கல்லூரி நூலகங்களுக்காக, தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் கடந்த மார்ச் மாதம் தேர்வு செய்யப்பட்ட 28 பேர் இன்னும் பணி ஆணைக்காகக் காத்திருக்கிறார்கள்.
÷தமிழகத்தில் மட்டும்தான் இந்த நிலைமை என்று எண்ணிவிட வேண்டாம். இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களிலும் நிலைமை இதுதான். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி நூலகங்களிலும் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது. ஆசிரியர்களின் தரம் குறைந்தாலும், கல்வியின் தரம் குறையாமல் இருக்க வேண்டுமானால் நவீனமயமாக்கப்பட்ட, தரமான நூலகங்களும், அவற்றைப் பராமரிக்க தேர்ச்சி பெற்ற நூலகர்களும் இருந்தாக வேண்டும். அரசுக் கல்லூரிகளில் மட்டுமல்ல, தமிழகத்தில் இயங்கும் அத்தனை தனியார் கல்லூரிகளிலும் முறையாக நவீனமயமாக்கப்பட்ட நூலகங்களும், அதைப் பராமரிக்க நூலகர்களும் இருப்பதை அரசு உறுதிப்படுத்துவது அவசியம்!
No comments:
Post a Comment