கடந்த சில ஆண்டுகளாகவே, சின்னச் சின்ன நிர்வாக ரீதியிலான பிரச்னைகளில்கூட நீதிமன்றம் தலையிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. நீதித்துறையின் நேரத்தை அரசியல் சட்டப் பிரச்னைகளும், அரசின் தவறான நிர்வாக முடிவுகளுக்கு எதிரான வழக்குகளும் ஆக்கிரமித்துக் கொள்வது ஆரோக்கியமான ஒன்றல்ல.
பலமான, பொறுப்பான எதிர்க்கட்சி இருக்குமானால், ஆட்சியாளர்களின் தவறான ஆணைகளுக்கு அடிபணிய மறுக்கும் நேர்மையான அதிகார வர்க்கம் இருக்குமானால், மக்கள் எதற்கெடுத்தாலும் நீதிமன்றத்தை நாட வேண்டிய அவசியம் ஏற்படாது.
இதற்கு இரண்டு காரணங்கள். ஆட்சியாளர்கள் முறையாக நிர்வாகத்தை நடத்தாமல் இருப்பதும், சுய ஆதாயத்திற்காகவோ, விருப்பு வெறுப்புகளினாலோ நிர்வாக முடிவுகளை எடுப்பதும் முதல் காரணம். கல்வி அறிவு அதிகரித்திருப்பதால், விழிப்புணர்வு அதிகரித்திருக்கும் மக்கள், அரசியல்வாதிகளின் நிர்வாகத் தவறுகளுக்கு நியாயம் கேட்க நீதிமன்றங்களின் கதவுகளைத் தட்டத் தொடங்கி இருப்பது இரண்டாவது காரணம்.
நீதிமன்றம் தலையிடத் தேவையில்லாத விளையாட்டு பற்றிய ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கும் கருத்து நிர்வாகம் தொடர்பான ஒன்று. 120 கோடி மக்கள் தொகையுள்ள இந்தியா உலக அரங்கில் விளையாட்டில் மிகமிகப் பின்தங்கிய நாடுகளில் ஒன்றாகத் திகழும் அவலத்தை நினைத்து மனம் வெதும்பும் பலரும், உச்சநீதிமன்றத்தின் கருத்தை கரகோஷம் எழுப்பி வரவேற்பார்கள்.
"விளையாட்டுடன் எந்தவிதத் தொடர்போ, அதுபற்றிய சாதாரண அறிவோகூட இல்லாதவர்கள் வெவ்வேறு விளையாட்டு அமைப்புகளின் தலைமைப் பொறுப்பில் இருப்பதும், அந்த விளையாட்டுகளின் வளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதும், வேதனைக்குரிய நிலைமை' என்று ஹாக்கி கூட்டமைப்பு தொடர்பான ஒரு வழக்கு விசாரணையில் நீதிபதிகள் டி.என். தாக்கூர், ஜே. செலமேஷ்வர் இருவரின் அமர்வு கருத்துத் தெரிவித்திருக்கிறது. பல்வேறு விளையாட்டுக் கூட்டமைப்புகளின் தலைமைப் பொறுப்பில் அரசியல்வாதிகளும், தொழிலதிபர்களும் இருப்பது அந்த விளையாட்டுகளின் மேம்பாட்டிற்கு ஊறு விளைவிக்கின்றனவே தவிர உதவவில்லை என்றும், அந்தந்த விளையாட்டு தொடர்பான வீரர்கள்தான் சம்பந்தப்பட்ட விளையாட்டுக் கூட்டமைப்புகளின் தலைமைப் பொறுப்பில் இருக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள்.
கடந்த பல ஆண்டுகளாகவே, அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களின் தயவில்தான் விளையாட்டு வீரர்கள் இந்திய அணியில் இடம்பெறவும், விளையாடவும் முடிகிறது. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் வந்தாலும் வந்தது, எல்லா அரசியல்வாதிகளும் பணம் சம்பாதிப்பதற்கு விளையாட்டும் ஒரு வழி என்பதைப் புரிந்து கொண்டுவிட்டனர்.
"விளையாட்டு வீரர்களுக்கு விளையாடத்தான் தெரியும். நிர்வாகம் தெரியாது. அதனால் இதுபோன்ற அமைப்புகளின் தலைமைப் பொறுப்பில் விளையாட்டின் மீது ஆர்வமுள்ள புரவலர்கள் இருப்பதுதான் சரி' என்பது அரசியல்வாதி, தொழிலதிபர் தரப்பினரின் வாதம். அப்படிப் பார்த்தால், தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்கள் நிர்வாகம் தெரிந்தவர்களா என்ன? அதிகாரிகளின் உதவியுடன் அவர்கள் ஆட்சி நடத்துவதுபோல, தலைமைப் பொறுப்பில் அமரும் அந்தந்தத் துறை சார்ந்த விளையாட்டு வீரர்களும் அதிகாரிகளின் துணையுடன் அந்தந்த அமைப்புகளை நிர்வகித்துக் கொள்ள முடியுமே.
கிராமப்புறப் பள்ளி அளவிலிருந்து, விளையாட்டில் நாட்டமுள்ள குழந்தைகளை முறையாக அடையாளம் கண்டு, தகுந்த பயிற்சியும் ஊக்கமும் அளித்து தயார்படுத்தினால், சர்வதேசப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை இந்தியா அள்ளிக் குவிக்கும். அதற்கு, விளையாட்டு அமைப்புகளிலிருந்து அரசியல்வாதிகளும், தொழிலதிபர்களும் அகற்றி நிறுத்தப்படுவதுதான் முதல் படி.
விளையாட்டுத் துறை இந்திய அரசுப் பணி அதிகாரிகளால் முறையாக நிர்வகிக்கப்படுவதில்லை. விளையாட்டுடன் தொடர்பே இல்லாதவர்கள் அமைச்சர்களாகவும், துறை சார்ந்த அதிகாரிகளாகவும் நியமிக்கப்படுவது இதற்கு முக்கிய காரணம். போலி சான்றிதழ் பெறுவோரும், பெயர் கேள்விப்படாத விளையாட்டுகளில் தேர்ச்சி பெற்றோரும் எந்தவித கண்காணிப்போ, கட்டுப்பாடோ இல்லாமல் உயர் கல்வியிலும், அரசு வேலைவாய்ப்பிலும் விளையாட்டுக்கான ஒதுக்கீடுகள் பெறுவதைக்கூடக் கேள்வி கேட்க ஆளில்லாத நிலைமை.
விளையாட்டை நாம் விளையாட்டாக எடுத்துக் கொள்கிறோம். அரசியல்வாதிகளும், தொழிலதிபர்களும் பணம் காய்க்கும் மரமாக எடுத்துக்கொள்கிறார்கள். ஆகமொத்தம், விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையுடன் நாம் விளையாடிக் கொண்டிருக்கிறோம்!
No comments:
Post a Comment