மதுரையில் கிரானைட் சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக "சீல்' வைக்கப்பட்டுள்ள குவாரிகளைத் திறக்க அனுமதி கேட்டு பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.
இது தொடர்பான வழக்கை நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், ஏ.கே. சிக்ரி அடங்கிய அமர்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது. அப்போது பி.ஆர்.பி. நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ஹரீஷ் சால்வே முன்வைத்த வாதம்:
"முழுமையாக ஆய்வு நடத்தாமல் எல்லா குவாரிகளையும் மூட தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கை சட்டவிரோதமானது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் அவர்களின் குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு நடத்திய ஆய்வை ஏற்காமல் மத்திய அரசு மூலம் குழு அமைத்து குவாரிகளில் மறு ஆய்வு நடத்த உத்தரவிட வேண்டும். இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கிரானைட் கற்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் பி.ஆர்.பி. நிறுவனம் முக்கியமானது. எனவே, குவாரிகளைத் திறக்க உத்தரவிட வேண்டும்' என்று வாதிட்டார்.
அதற்கு ஆட்சேபம் தெரிவித்து தமிழக அரசு சார்பில் வழக்குரைஞர் அரிமா சுந்தரம் முன்வைத்த வாதம்:
"மதுரையைச் சுற்றி 175 குவாரிகள் உள்ளன. அவற்றில் ஆய்வு நடத்தியதில் 78 குவாரிகள் விதிகளை மீறி சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்தது கண்டறியப்பட்டது. இதனால் சுமார் ரூ. 12,390.460 கோடி அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அவற்றின் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பி.ஆர்.பி. நிறுவனத்துக்குச் சொந்தமான 22 குவாரிகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே, பி.ஆர்.பி. நிறுவனம் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறுவதை ஏற்கக் கூடாது.
வழக்கு முடியும்வரை அந்த குவாரிகளைத் திறக்க உத்தரவிடக் கூடாது' என்று அரிமா சுந்தரம் கேட்டுக் கொண்டார்.
இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் அளித்த தீர்ப்பு:
"குவாரிகளை திறக்க அனுமதி கேட்டு பி.ஆர்.பி. நிறுவனம் தொடர்ந்த வழக்கை மதுரை உயர் நீதிமன்ற கிளை விசாரித்துள்ளது. இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. குவாரிகளில் பணியாற்றிய தொழிலாளர்களின் நலனுக்காக சில உத்தரவுகளை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்துள்ளது. எனவே, குவாரிகளைத் திறக்க அனுமதிக்க முடியாது என கடந்த பிப்ரவரி மாதம் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்யவோ, தலையிடவோ உச்ச நீதிமன்றம் விரும்பிவில்லை.
அந்த நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கடந்த ஆண்டு டிசம்பர் 14-ஆம் தேதி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவும் சரியானது என்றே கருதுகிறோம். எனவே, பி.ஆர்.பி. எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
பின்னணி: மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் அரசு புறம்போக்கு நிலங்கள், பொதுப்பணித் துறை கண்மாய்கள், குத்தகைக்கு ஒதுக்கப்பட்ட மலைப் பகுதியை விட கூடுதலான மலைகளில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான கிரானைட் கற்கள் வெட்டி எடுத்ததாக பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனம் மீது தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அதைத் தொடர்ந்து, சட்டவிரோதமாகக் செயல்பட்டதாகக் கூறி பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட குவாரிகளுக்கு சீல் வைத்து மதுரை மாவட்ட ஆட்சியர் கடந்த ஆண்டு சீல் வைத்தார். இதன் தொடர்ச்சியாக பி.ஆர்.பி. நிறுவன அதிபர் பழனிச்சாமி உள்ளிட்டோர் மீது 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில், "குவாரிகள் மூடப்பட்டதால் அதில் பணியாற்றி வந்த சுமார் மூன்றாயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்; குவாரிகள் வெட்டப்படுவது நின்று விட்டதால் அரசுக்கும் அன்னிய செலாவணி கிடைக்காத நிலை உள்ளது. மேலும், ஒரு சில குவாரிகளை ஆய்வு செய்து விட்டு 175 குவாரிகளையும் மூட தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கை தவறானது. எனவே, அவற்றைத் திறக்க வேண்டும்' என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனம் தொடர்ந்த வழக்கு கடந்த பிப்ரவரி மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது.
அந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பழனிச்சாமி மேல்முறையீடு செய்த வழக்கு வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment