Friday, December 13, 2013

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் கோரி மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் வழங்கக் கோரி பேராசிரியர் ஏ. மார்க்ஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.
இது தொடர்பான மனுவை விசாரித்து நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், ஏ.கே. சிக்ரி அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பு:
"தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் சார்பில் கடந்த மே மாதம் 22-ஆம் தேதி நடத்தப்படவிருந்த ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்யக் கோரி மனுதாரர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அத்தேர்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் குறைந்தபட்ட "கட் ஆஃப்' மதிப்பெண் வழங்க வகை செய்யும் அறிவிக்கை வெளியிட வேண்டும் என்றும் மனுதாரர் உயர் நீதிமன்றத்தில் கோரியிருந்தார்.
ஆனால், அவருக்கு நிவாரணம் வழங்க மறுத்த உயர் நீதிமன்றம் மதிப்பெண் சலுகை வழங்குவது என்பது மாநில அரசின் கொள்கை தொடர்புடைய விவகாரம். அதில் நீதிமன்றம் தலையிடாது. இடஒதுக்கீடு அடிப்படையில் தேர்வு மதிப்பெண் சலுகை வழங்கும்படி ஒரு மாநிலத்துக்கு நீதிமன்றத்தால் உத்தரவிட முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
அந்த உத்தரவு சரியானது என்று உச்ச நீதிமன்றம் கருதுகிறது. இதுபோன்ற விவகாரத்தில் மாநில அரசுதான் முடிவு செய்ய வேண்டும். நீதிமன்றம் அதன் வரம்பை மீறிக் கொண்டு இந்த விவகாரத்தில் உத்தரவு பிறப்பிக்க முடியாது. அதனால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என்று நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டனர்.
முன்னதாக, இந்த வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், "ஆசிரியர் தகுதித் தேர்வில் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டின்படி மதிப்பெண் வழங்க முடியாது என தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீத மதிப்பெண் பெற்றால்தான் ஆசிரியர் வேலைவாய்ப்பு என்ற கொள்கையில் தமிழக அரசு சமரசம் செய்து கொள்ள விரும்பவில்லை' என்று கூறியிருந்தது. அதை பரிசீலித்த உச்ச நீதிமன்றம் மேற்கண்ட தீர்ப்பை வெள்ளிக்கிழமை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments: