வங்கதேச நாட்டில் 1971ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட படுகொலை தொடர்பான வழக்கில் ஜமாத்-இ-இஸ்லாமி துணை பொதுச் செயலாளர் அப்துல் காதருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை அந்நாட்டு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உறுதி செய்துள்ளது. மரண தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
டாக்காவில் உள்ள வங்கதேச உச்சநீதிமன்றத்தில், தலைமை நீதிபதி முஜம்மல் ஹுசைன் முன்பு வியாழக்கிழமை இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, அந்த மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து டாக்கா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்துல் காதருக்கு எந்நேரமும் மரண தண்டனை நிறைவேற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.
கடந்த 1971ஆம் ஆண்டு, பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை பெறுவதற்கான போராட்டம் வங்கதேச நாட்டில் நடைபெற்றது. அப்போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு படுகொலைகளை நிகழ்த்தியதாக ஜமாத்-இ-இஸ்லாமி துணை பொதுச் செயலாளர் அப்துல் காதர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து 2010ஆம் ஆண்டு, அப்துல் காதர் கைது செய்யப்பட்டு, அவருக்கு எதிராக வங்கதேச போர்க்குற்ற தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த போர்க்குற்ற தீர்ப்பாயம், அப்துல் காதருக்கு கடந்த பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி, ஆயுள் தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மேல்முறையீட்டு மையம், அப்துல் காதருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை மரண தண்டனையாக அதிகரித்து செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி உத்தரவிட்டது.
இதனையடுத்து, அவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கையில் சிறைத்துறை அதிகாரிகள் கடந்த செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்துல் காதர் சார்பாக அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில், மரண தண்டனையை எதிர்த்து ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து அப்துல் காதருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததால், கடைசி நேரத்தில் அவருக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது நிறுத்தப்பட்டது.
No comments:
Post a Comment