Thursday, December 12, 2013

வங்கதேச இஸ்லாமியத் தலைவர் தூக்கிலிடப்பட்டார்

பங்களாதேஷ் பாகிஸ்தானிடமிருந்து 1971 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற நடத்திய போரில், மானுட குலத்துக்கு எதிரான குற்றங்கள் இழைத்ததாகத் தீர்ப்பளிக்கப்பட்ட, இஸ்லாமிய எதிர்க்கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவரான அப்துல் காதர் முல்லா சற்று முன்னர் தூக்கிலிடப்பட்டார்.
இவர் நேற்று முந்தினம் செவ்வாய்க்கிழமையே தூக்கிலிடப்படவிருந்தார். ஆனால் நீதிமன்றத்தின் தலையீட்டின் பேரில் அவருக்கு வழங்கப்பட்ட மரணதண்டனை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இவருக்கு அளிக்கப்பட்ட மரணதண்டனை சரியானதே என்று அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த பின்னணியில் இவர் சற்றுமுன்னர் தூக்கிலிடப்பட்டதாக, வங்கதேசத்திலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
கடந்த செவ்வாய்க்கிழமை அவர் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு சில மணிநேரங்களுக்கு முன்னர், அவர் சமர்ப்பித்த மேல்முறையீட்டு மனு மீது நீதிபதிகள் விசாரணையை நடத்த உதவ, அவரது தூக்கு தண்டனை பரபரப்பான வகையில் நிறுத்திவைக்கப்பட்டது.
முல்லாவுக்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டனையின் மீது நீதிமன்ற மேல் முறையீட்டை செய்ய அவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்படாமல் அவர் தூக்கிலிடப்பட்டால், அது சர்வதேச சட்டத்தை மீறும் செயலாகும் என்று மனித உரிமைக் குழுக்கள் எச்சரித்திருந்தன.

No comments: