Thursday, December 19, 2013

மாறும் மதிப்பீடுகள்!!!

இச்சைகளை துறந்து விடு....
 பற்றற்று இரு....
 உலக இன்பங்கள் மீது ஆசை வைக்காதே....

இப்படியெல்லாம் உலகத்துக்கு புத்திமதி சொன்ன இந்தியாவில் மக்கள் இன்று அற்ப ஆசைகளின் பிடியில் சிக்கி நிம்மதி இழந்து தவிப்பதாக ஆய்வுகள் உறுதி செய்கின்றன.உலகம் போகும் போக்கு பற்றி ஐந்து கண்டங்களில் 20 நாடுகளில் இந்த இப்சோஸ் சர்வே நடத்தப்பட்டது. இருப்பதைக் கொண்டு திருப்தியுடன் வாழும் சமூகங்களாக  மதிக்கப்பட்ட இந்திய, சீன மக்கள் இன்று அடியோடு மாறிவிட்டதை ஆய்வு பதிவு செய்திருக்கிறது. நம்மைவிட சீனா இதில் மோசமான நிலையில் உள்ளது. 

ஒரு ரேடியோ, சைக்கிள், வாட்ச், தையல் மெஷின்.. இதுதான் வாழ்க்கையில் அடைய வேண்டிய பொருட்கள் என்று கம்யூனிச புரட்சியை தொடர்ந்த தலைமுறைகளில் சீனர்கள் நம்பினர். இன்று சொந்த வீடு, கார், ஸ்மார்ட்ஃபோன், லேப்டாப் இல்லாமல் ஒரு வாழ்க்கையா என கேட்கின்றனர். 71 சதவீத சீனர்களின் மனப்போக்கு இப்படி.இந்தியர்களில் 53 சதவீதம் அவ்வாறு நினைக்கிறார்கள். அதையெல்லாம் அடைவதற்கு நிறைய பணம் தேவை. அவ்வளவு சம்பாதிக்க கடுமையாக உழைக்க வேண்டும் என்ற துடிப்புடன் தொடர்ந்து இயங்குவதால் மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர் என்று ஆய்வு சுட்டிக் காட்டுகிறது.ஒரு மனிதனின் வாழ்க்கை வெற்றிகரமாக அமைந்திருக்கிறதா என்பது அறிவு, திறமை, ஆரோக்கியம், வித்தை போன்ற பண்புகளையும் நலன்களையும் அடிப்படியாக கொண்டு மதிப்பிடப்பட்டது. 

சமீப காலத்தில் இந்த அளவுகோல் மாறிவிட்டது...
எவ்வளவு சொத்து....
என்ன வருமானம்....
எத்தனை வசதிகள் என்பதை வைத்து வெற்றிகரமான நபரா அல்லது வீணாய் போனவனா.....
என்று எடைபோடும் புதிய வழக்கம் நடைமுறைக்கு வந்துவிட்டது.

வளரும் நாடுகளான இந்தியா, சீனாவுடன் ஒப்பிடும்போது வளர்ச்சி அடைந்த ஸ்வீடன் (வெறும் 7 சதம்), டென்மார்க் போன்றவற்றில் மக்களின் ஆசைகள் கணிசமாக குறைந்துள்ளன. இந்தியர்களிடம் காணப்படும் மாற்றத்தின் இன்னொரு வெளிப்பாடு, நாட்டின் நிலைமை என்ன ஆகுமோ தெரியாது. ஆனால் நான் சீக்கிரம் நல்ல நிலைக்கு வருவேன்’ என்ற நம்பிக்கை.அது நடந்தாலும் சரிதான். மக்கள் நல்ல நிலைக்கு வந்தால் நாடு முன்னேறி விட்டதாகத்தானே அர்த்தம்.

No comments: