Wednesday, December 18, 2013

தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி

நாற்பது கிராம் தங்கத்துடன் பத்து கிராம் கண்ணாடிக் கற்கள் பதித்த நகை என்றால் அதன் விலையை எப்படி நிர்ணயிக்க வேண்டும்? நாற்பது கிராம் தங்கத்துக்கு தங்கத்தின் விலையையும் பத்து கிராம் கண்ணாடிக் கல்லுக்கு கண்ணாடிக் கல்லின் விலையையும் தான் நிர்ணயிக்க வேண்டும்.
ஆனால் ஐம்பது கிராம் தங்கத்துக்கான விலையை நம்மிடம் வாங்கி விடுகின்றனர். தங்கத்தின் விலையும் கல்லின் விலையும் சமமானவை அல்ல. இரண்டுக்கும் இடையே ஏணி வைத்தாலும் எட்ட முடியாத வித்தியாசம் உள்ளது.
நாற்பது கிராம் தங்கத்துக்கு ஐம்பது கிராம் பணத்தை வாங்குவது மோசடியாகும். ஐம்பது கிராம் தங்கத்துக்குப் பணத்தை வாங்கிக் கொண்டு கல் முத்து பவளம் இலவசம் என்று கூறி மக்களை மேலும் மதிமயக்குகிறார்கள். சில பேர் நாற்பது கிராமுக்கு ஐம்பது கிராமுக்கான பணத்தை வாங்கிக் கொண்டு கல்லுக்கு தனியாகவும் பணத்தை வாங்கி இரட்டை மோசடி செய்கிறார்கள்.
அதே சமயம் நாம் பழைய நகையை விற்கச் சென்றால் கல்லை அப்புறப்படுத்தி விட்டு தங்கத்தை மட்டும் எடை போட்டு பணம் தருகிறார்கள். இதற்கு நிகரான ஒரு மோசடி வேறு எந்த வியாபாரத்திலும் இருக்குமா என்று தெரியவில்லை.
இரண்டாவது மோசடி:
சொக்கத் தங்கம் எனப்படும் தனித்தங்கத்தில் நகை செய்ய முடியாது. அதில் செம்பு கலந்தால் தான் நகை செய்ய முடியும்.ஆயிரம் கிராம் நகை செய்ய 916 கிராம் தங்கமும் 84 கிராம் செம்பும் சேர்த்து செய்யப்படும் நகை 22 காரட் என்றும் 916 KDM என்றும் சொல்லப்படுகிறது.
916 கிராம் தங்கத்துடன் 84 கிராம் செம்பு சேர்த்து விட்டு 1000 கிராமுக்கும் தங்கத்தின் விலை போடப்படுகிறது. செம்புக்கு தங்கத்தின் விலை போடுவது மற்றொரு மோசடியாக உள்ளது.
மூன்றாவது மோசடி:
தங்கத்துக்கு இன்றைய காலத்தில் இரண்டு விலை உள்ளது. ஒன்று மூலப் பொருளுக்கான விலை. மற்றொன்று நாம் விரும்பும் வகையில் தயார் செய்வதற்கான கூலியாகும். ஐந்து பவுன் தங்கத்தில் ஒரு நகை வாங்கினால் ஐந்து பவுன் தங்கத்திற்கான விலையையும் நாம் கொடுக்க வேண்டும். அதைக் குறிப்பிட்ட நகையாக செய்ததற்கான கூலியையும் கொடுத்தாக வேண்டும். இது மட்டும் இருந்தால் இதில் மோசடி ஏதும் இல்லை.
ஆனால் ஐந்து பவுன் தங்கத்துக்கும் நம்மிடம் பணம் வாங்கிக் கொண்டு அதற்கான கூலியையும் நம்மிடம் வாங்கிக் கொண்டு *சேதாரம்* என்ற பெயரில் ஒரு தொகையையும் வாங்கிக் கொள்கின்றனர்.
அதாவது மேற்கண்ட நகையைச் செய்யும் போது பத்து சதவிகிதம் சேதாரம் ஆகி விட்டது எனக் கூறி அதற்கான பணத்தையும் நம்மிடம் வாங்கிக் கொள்கின்றனர். அதாவது ஐந்து பவுனுக்கு மட்டும் பணம் வாங்காமல் இன்னொரு அரை பவுனுக்கும் சேர்த்து நம்மிடம் பணம் கறந்து விடுகிறார்கள்.
நகை செய்யும் போது அரை பவுன் சேதரமாக ஆகி வீணாகி விட்டால் அதை நம்மிடம் இருந்து வாங்குவது முறையானது தான். ஆனால் தங்கத்தில் எதுவுமே சேதாரம் ஆவது கிடையாது.
நகை செய்யும் போதும் பட்டை தீட்டும் போதும் தூள்களாக கீழே சிந்துபவை சேதாரமாகி குப்பைக்குப் போகாது.  துகள்களாக உள்ளதை மீண்டும் வேறு நகைக்கு அவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள்.  இதற்கெல்லாம் சேர்த்துத் தான் செய்கூலி வாங்கிக் கொள்கின்றனர். மக்களுக்குப் புரியாத டெக்னிகல் வார்த்தைகளைப் பயன்படுத்தி மோசடி செய்கின்றனர். இதைச் செய்யாத நகை வியாபாரிகளைக் காண முடியவில்லை.
அது போல் பழைய நகை வாங்கும் போது செய்கூலி சேதாரம் எல்லாம் தர மாட்டார்கள். அது நியாயமானது தான்.  ஆனால் நாம் கொடுக்கும் நகையில் கல்லையும் நீக்கி விட்டு எடை போட்டு அந்த எடைக்கு உள்ள பணத்தைத் தர வேண்டும். அவர்கள் விற்பனை செய்யும் விலையைத் தர வேண்டும் என்று நாம் கூறவில்லை. அவர்கள் வாங்கும் விலையைக் கொடுக்க வேண்டுமல்லவா? அப்படி கொடுக்க மாட்டார்கள். மாறாக நாம் நாற்பது கிராம் நகையை விற்கச்சென்றால் அதில் கால் வாசிக்கு மேல் குறைத்துத் தான் தருவார்கள்.
இதற்கெல்லாம் ஒரே தீர்வு தங்கத்தின் மீது வைத்துள்ள மோகத்தை குறைப்பதுதான். படித்த நம்மிலிருந்து ஆரம்பிக்கட்டும்.

Saturday, December 14, 2013

கல்வி உதவித்தொகை பெற திறன் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: தேர்வுத்துறை அறிக்கை

8–ம் வகுப்பு மாணவர்கள் உதவித்தொகை பெற திறன் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் கீழ் படிப்புதவித்தொகை எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. உதவித்தொகை வழங்க மாணவர்களை தேர்வு செய்யும் பொருட்டு என்.எம்.எம்.எஸ். தேர்வு அனைத்து வட்டார அளவில் நடைபெறவுள்ளது. தேர்வு தேதி 22–2–2014 இத்தேர்வுக்கான விண்ணப்பங்களை 16–ந்தேதி முதல் 20–ந்தேதி வரை இத்துறையின் இணையதளம் வழியாக 16–ந்தேதி முதல் 20–ந்தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம்.

அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2013–2014 கல்வி ஆண்டில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ–மாணவியர் அவர்தம் பெற்றோரின் குடும்ப வருமானம் ஆண்டொன்றுக்கு ரூ.1,50,000–க்கு மிகாமல் இருக்கவேண்டும். இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க தாங்கள் பயிலும் பள்ளியின் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

தலைமை ஆசிரியர்கள் வெற்று விண்ணப்பங்களை எட்டாம் வகுப்பு பயின்று வரும் மாணவர்களிடம் கொடுத்து பெற்றோர் உதவியுடன் பூர்த்தி செய்தல் வேண்டும். புகைப்படம் ஒட்டி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேர்வர்கள் தாம் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் தேர்வுக் கட்டணம் ரூ.50 உடன் 25–12–2013–க்குள் ஒப்படைத்தல் வேண்டும்.

தலைமை ஆசிரியர் பூர்த்தி செய்யப்பட்ட அனைத்து விண்ணப்பங்களையும் www.tndge.in என்ற இணையதளம் மூலம் 23–ந்தேதி முதல் 31–ந்தேதிக்குள் பதிவு செய்தல் வேண்டும். இந்த தகவலை அரசு தேர்வுத்துறை இயக்குனர் கு.தேவராஜன் வெளியிட்டுள்ளார்.  

Friday, December 13, 2013

பி.ஆர்.பி. கிரானைட் மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

மதுரையில் கிரானைட் சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக "சீல்' வைக்கப்பட்டுள்ள குவாரிகளைத் திறக்க அனுமதி கேட்டு பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.
இது தொடர்பான வழக்கை நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், ஏ.கே. சிக்ரி அடங்கிய அமர்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது. அப்போது பி.ஆர்.பி. நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ஹரீஷ் சால்வே முன்வைத்த வாதம்:
"முழுமையாக ஆய்வு நடத்தாமல் எல்லா குவாரிகளையும் மூட தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கை சட்டவிரோதமானது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் அவர்களின் குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு நடத்திய ஆய்வை ஏற்காமல் மத்திய அரசு மூலம் குழு அமைத்து குவாரிகளில் மறு ஆய்வு நடத்த உத்தரவிட வேண்டும். இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கிரானைட் கற்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் பி.ஆர்.பி. நிறுவனம் முக்கியமானது. எனவே, குவாரிகளைத் திறக்க உத்தரவிட வேண்டும்' என்று வாதிட்டார்.
அதற்கு ஆட்சேபம் தெரிவித்து தமிழக அரசு சார்பில் வழக்குரைஞர் அரிமா சுந்தரம் முன்வைத்த வாதம்:
"மதுரையைச் சுற்றி 175 குவாரிகள் உள்ளன. அவற்றில் ஆய்வு நடத்தியதில் 78 குவாரிகள் விதிகளை மீறி சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்தது கண்டறியப்பட்டது. இதனால் சுமார் ரூ. 12,390.460 கோடி அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அவற்றின் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பி.ஆர்.பி. நிறுவனத்துக்குச் சொந்தமான 22 குவாரிகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே, பி.ஆர்.பி. நிறுவனம் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறுவதை ஏற்கக் கூடாது.
வழக்கு முடியும்வரை அந்த குவாரிகளைத் திறக்க உத்தரவிடக் கூடாது' என்று அரிமா சுந்தரம் கேட்டுக் கொண்டார்.
இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் அளித்த தீர்ப்பு:
"குவாரிகளை திறக்க அனுமதி கேட்டு பி.ஆர்.பி. நிறுவனம் தொடர்ந்த வழக்கை மதுரை உயர் நீதிமன்ற கிளை விசாரித்துள்ளது. இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. குவாரிகளில் பணியாற்றிய தொழிலாளர்களின் நலனுக்காக சில உத்தரவுகளை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்துள்ளது. எனவே, குவாரிகளைத் திறக்க அனுமதிக்க முடியாது என கடந்த பிப்ரவரி மாதம் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்யவோ, தலையிடவோ உச்ச நீதிமன்றம் விரும்பிவில்லை.
அந்த நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கடந்த ஆண்டு டிசம்பர் 14-ஆம் தேதி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவும் சரியானது என்றே கருதுகிறோம். எனவே, பி.ஆர்.பி. எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
பின்னணி: மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் அரசு புறம்போக்கு நிலங்கள், பொதுப்பணித் துறை கண்மாய்கள், குத்தகைக்கு ஒதுக்கப்பட்ட மலைப் பகுதியை விட கூடுதலான மலைகளில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான கிரானைட் கற்கள் வெட்டி எடுத்ததாக பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனம் மீது தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அதைத் தொடர்ந்து, சட்டவிரோதமாகக் செயல்பட்டதாகக் கூறி பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட குவாரிகளுக்கு சீல் வைத்து மதுரை மாவட்ட ஆட்சியர் கடந்த ஆண்டு சீல் வைத்தார். இதன் தொடர்ச்சியாக பி.ஆர்.பி. நிறுவன அதிபர் பழனிச்சாமி உள்ளிட்டோர் மீது 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில், "குவாரிகள் மூடப்பட்டதால் அதில் பணியாற்றி வந்த சுமார் மூன்றாயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்; குவாரிகள் வெட்டப்படுவது நின்று விட்டதால் அரசுக்கும் அன்னிய செலாவணி கிடைக்காத நிலை உள்ளது. மேலும், ஒரு சில குவாரிகளை ஆய்வு செய்து விட்டு 175 குவாரிகளையும் மூட தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கை தவறானது. எனவே, அவற்றைத் திறக்க வேண்டும்' என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனம் தொடர்ந்த வழக்கு கடந்த பிப்ரவரி மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது.
அந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பழனிச்சாமி மேல்முறையீடு செய்த வழக்கு வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் கோரி மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் வழங்கக் கோரி பேராசிரியர் ஏ. மார்க்ஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.
இது தொடர்பான மனுவை விசாரித்து நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், ஏ.கே. சிக்ரி அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பு:
"தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் சார்பில் கடந்த மே மாதம் 22-ஆம் தேதி நடத்தப்படவிருந்த ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்யக் கோரி மனுதாரர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அத்தேர்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் குறைந்தபட்ட "கட் ஆஃப்' மதிப்பெண் வழங்க வகை செய்யும் அறிவிக்கை வெளியிட வேண்டும் என்றும் மனுதாரர் உயர் நீதிமன்றத்தில் கோரியிருந்தார்.
ஆனால், அவருக்கு நிவாரணம் வழங்க மறுத்த உயர் நீதிமன்றம் மதிப்பெண் சலுகை வழங்குவது என்பது மாநில அரசின் கொள்கை தொடர்புடைய விவகாரம். அதில் நீதிமன்றம் தலையிடாது. இடஒதுக்கீடு அடிப்படையில் தேர்வு மதிப்பெண் சலுகை வழங்கும்படி ஒரு மாநிலத்துக்கு நீதிமன்றத்தால் உத்தரவிட முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
அந்த உத்தரவு சரியானது என்று உச்ச நீதிமன்றம் கருதுகிறது. இதுபோன்ற விவகாரத்தில் மாநில அரசுதான் முடிவு செய்ய வேண்டும். நீதிமன்றம் அதன் வரம்பை மீறிக் கொண்டு இந்த விவகாரத்தில் உத்தரவு பிறப்பிக்க முடியாது. அதனால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என்று நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டனர்.
முன்னதாக, இந்த வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், "ஆசிரியர் தகுதித் தேர்வில் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டின்படி மதிப்பெண் வழங்க முடியாது என தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீத மதிப்பெண் பெற்றால்தான் ஆசிரியர் வேலைவாய்ப்பு என்ற கொள்கையில் தமிழக அரசு சமரசம் செய்து கொள்ள விரும்பவில்லை' என்று கூறியிருந்தது. அதை பரிசீலித்த உச்ச நீதிமன்றம் மேற்கண்ட தீர்ப்பை வெள்ளிக்கிழமை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா, கருணாநிதி கொடிய குற்றவாளிகள்: மாணவி அதிரடி கடிதம்!



டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் சட்டவிரோதமாக போதைப்பொருள் விற்று தமிழக மக்களை நாசப்படுத்திவரும் தமிழக முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு ஒரு சட்டமாணவி எழுதும் பகிரங்கக் கடிதம்.

நாள்: 06.12.2013

அனுப்புநர்: ஆ.நந்தினி, நான்காம் ஆண்டு பி.ஏ.பி.எல், அரசு சட்டக்கல்லூரி, மதுரை-625020.

பெறுநர்: செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்கள், தமிழக முதல்வர் & அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர், வேதி நிலையம், 81/36 போயஸ் கார்டன், சென்னை-600086.

தமிழக முதல்வர் அவர்களுக்கு, வணக்கம்.

மதுவால் அப்பாவைப் பறிகொடுத்த 100 மாணவர்களோடு உங்களை நேரில் சந்திக்க நேரம் கேட்டு கடந்த 01.11.2013 அன்று கடிதம் எழுதியிருந்தேன். இதற்கு தங்களிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை.

"ஒரு அரசமைப்பு எவ்வளவு உயர்ந்ததாக இருந்தபோதிலும் அதை செயல்படுத்துபவர்கள் மோசமானவர்களாக இருந்தால் அந்த அரசமைப்பும் மோசமாகிவிடும்"- என அரசியல்சாசன சிற்பி அண்ணல் அம்பேத்கர் சொன்னது யாருக்குப்பொருந்துகிறதோ இல்லையோ நிச்சயமாக உங்களுக்கும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கும் 100% பொருந்தும். நீங்கள் இருவரும் தானே தமிழக மக்களைத் திட்டமிட்டு குடிக்கு அடிமைப்படுத்தி, பல லட்சம் குடும்பங்களை நாசப்படுத்திய குற்றவாளிகள்!

ஆம், நீங்கள் இருவரும் கொடிய குற்றவாளிகள் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. இப்படிச் சொல்வதற்காக நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதைச் சந்திக்கத் தயாராகவே இக்கடிதத்தை எழுதுகிறேன். எந்தக் குற்றமும் செய்யாத மூன்று கோவை வேளாண் கல்லூரி மாணவிகளை 2000 ஆவது ஆண்டு உங்களது அடியாட்கள் பேருந்தோடு பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திப் படுகொலை செய்தார்களே? அதை விடவா பெரிய தண்டனையை எனக்குத் தந்துவிட முடியும்?

நான் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது நிகழ்ந்த அந்தக் கோரச் சம்பவம் என் மனதில் ஆறாத வடுவாகப் பதிந்துவிட்டது. இன்றுவரை, அச்சம்பவத்துக்கு ஒரு வருத்தம் கூட நீங்கள் தெரிவிக்கவில்லை. இந்தளவுக்கு கொடூரமனம் படைத்தவராக இருப்பதால் தான் மதுவால் அப்பாவைப் பறிகொடுத்து அவதிப்படும் குழந்தைகளின் வேதனை உங்களுக்குப் புரியவில்லை.

சாராயத்தையும், ஊழல் பணத்தையும் வைத்து மக்களை அடிமையாக்கி அரசியல் செய்வதில் நீங்களும் கருணாநிதி அவர்களும் ஒன்று தான். திருமங்கலம், பென்னாகரம் இடைத்தேர்தலில் அவர் என்ன செய்தாரோ அதைத்தானே நீங்களும் ஏற்காட்டில் செய்திருக்கிறீர்கள்.

தமிழக முதல்வரே! டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் அன்றாடம் ஏராளமான குடும்பங்களின் சாபத்தையும் பாவத்தையும் நீங்கள் சேர்த்துக் கொண்டிருக்கிறீர்கள். மதுவிற்பனை அதிகரிக்க, அதிகரிக்க உங்களது பாவக்கணக்கும் அதிகரிப்பதை மறந்துவிடாதீர்கள். நிச்சயமாக, ஒருநாள் இதற்கெல்லாம் நீங்கள் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.

நீதிக்காக மன்னனையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்திய கற்புக்கரசி கண்ணகி வாழ்ந்த மண் இது. நீதியும் நியாயமும் இங்கு இன்னும் உயிரோடுதான் இருக்கிறது. பாலில் கலப்படம் செய்து விற்பவர்களுக்கு ஆயுள் தண்டனை தரவேண்டும் என சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளது. பாலில் கலப்படம் செய்தாலே ஆயுள் தண்டனை என்றால், மது என்னும் கொடிய விஷத்தை விற்று ஏராளமான மக்களைப் படுகொலை செய்யும் உங்களுக்கு என்ன தண்டனை தருவது? தூக்குதண்டனை கூடப் போதாது. அதையும் தாண்டி புதிதாக ஏதாவது தண்டனையை சட்டத்தில் சேர்க்க வேண்டும்.

சட்டத்தில் இருந்து தப்புவது உங்களுக்குக் கைவந்த கலையாக இருக்கலாம். ஆனால் கடவுளின் தீர்ப்பிலிருந்து உங்களால் என்றுமே தப்பிக்க முடியாது.

இப்படிக்கு,

ஆ.நந்தினி.

நகல்: 1. திரு.மு.கருணாநிதி அவர்கள்,முன்னாள் தமிழக முதல்வர். 2. தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள். 3. ஊடகங்கள். 4. தமிழக மக்களுக்கு..

- நந்தினி
thanks;inneram.

Thursday, December 12, 2013

'ஆம் ஆத்மி பாணியில் ஊழலுக்கு எதிரான இளைஞர் அமைப்பு': சகாயம் ஐ.ஏ.எஸ். 15-ல் துவக்கி வைக்கிறார்

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஊழல் எதிர்ப்பை முன்னிறுத்தி, ஆம் ஆத்மி கட்சி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் தமிழகத்திலும் இரு இளைஞர்கள் ஊழலுக்கு எதிராக புறப்பட்டிருக்கிறார்கள். சென்னையை சேர்ந்த செந்தில் ஆறுமுகம் (36), மற்றும் சிவ.இளங்கோ (36), ஆகிய இரு இளைஞர்கள் ஊழலுக்கு எதிராக போராட புதிய உக்தியை கையாண்டுள்ளனர்.
தமிழகம் முழுவதிலும் உள்ள எளிய மக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் பற்றியும், அவற்றைத் தர மறுக்கும் ஊழியர் களை வழிக்குக் கொண்டு வருவது பற்றியும் 24 மணி நேரமும் தகவல் கொடுக்க இலவச தொலைபேசி கட்டுப்பாட்டு அறையினை தொடங்க வுள்ளனர். வரும் 15ம் தேதி சென்னை சைதாப்பேட்டையில் அதிகாரப்பூர்வ மாக இந்த கட்டுப்பாட்டு அறை தொடங்கப்படுகிறது. இதனை ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம், தி.நகர், சர்.பிட்டி தியாகராயா அரங்கில் தொடங்கி வைக்கிறார்.
பேஸ்புக் உதவியால்
மறைந்த சமூக ஆர்வலரும், மக்கள் சக்தி நிறுவனருமான எம்.எஸ்.உதயமூர்த்தியின் பட்டறையில் இருந்து வந்திருக்கும் அவர்கள் ‘சட்டப்பஞ்சாயத்து’ என்ற அமைப்பு தொடங்கியுள்ளனர். இம்மையம், தொடங்கப்படுவதற்கு முன்பாகவே இவர்களின் பேஸ்புக் பக்கத்தில் (facebook.com/sattapanchayath), ஒரு மாதத்திலேயே 5,300 உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர்.
இந்த மையத்தின் “7667100100” என்ற தொலைபேசி சேவை எண்ணை, சோதனை முறையில் கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி மேற்கண்ட இருவரும் அறிமுகப்படுத்தினர்.
இதில், ரேசன் கார்டு வாங்குவது, அது தாமதமாக கிடைப்பதைத் தவிர்ப்பது, பட்டா மாற்றம், டிரைவிங் லைசென்ஸ் எடுப்பது போன்ற பல்வேறு சேவைகளின் முழு விவரம் பற்றி பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது. அப்படி கிடைக்காதபட்சத்தில் அதை ஒருவர் எப்படி பெறுவது? என்பது பற்றியும் விளக்கம் அளிக்கப்படுகிறது.
வழிக்கு வந்த அதிகாரிகள்
இந்த அமைப்பை தொடங்குவதற்காக கணிசமான வருவாய் அளித்து வந்த, சாப்ட்வேர் நிறுவன வேலையை இவர்கள் உதறிவிட்டு வந்துள்ளனர்.
இந்த மையத்தை தொடங்கியுள்ள செந்தில் ஆறுமுகம் கூறியதாவது:- சாமானிய மக்களுக்கு அரசு விதிமுறைகள் தெரியாததால் அரசு அலுவலகங்களில் அலைக்கழிக்கப் படுகிறார்கள். அதுபோன்றவர் களுக்கு எங்களால் இயன்ற உதவி களை அளிக்கவே இந்த மையம் தொடங்கப்படுகிறது. சோதனை முறையில் செயல்படத்துவங்கிய சில நாள்களிலேயே பலரது பிரச்சினை களை தீர்த்து வைத்துள்ளோம்.
உதாரணத்துக்கு, குறிஞ்சிப்பாடியில் இருந்து சண்முகம் என்பவர் தொடர்பு கொண்டு தனது ரேசன் கார்டு தயாரானபிறகும், தராமல் இழுத்தடிப்பதாகவும், ரூ.400 கொடுத்தால் தருவதாக ஊழியர்கள் கூறுவதாகவும் தெரிவித்தார். எங்களிடம் தமிழகத்தில் உள்ள அனைத்து அதிகாரிகள் விவரங்கள் தொகுப்பு உள்ளது. அதை வைத்து சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொண்டு அதுபற்றி கேட்டோம்.
அப்போது அந்த அதிகாரி ரேசன் கார்டை உடனே கொடுத்துவிட்டார். ரேசன்கார்டை பெற ரூ.5 செலுத்தினால் போதுமானது.
- தி ஹிந்து

மேரி பாரா - இவரைத் தெரியுமா?

#ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டார்.

#ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் பெண் சி.இ.ஓ. இவர். ஜனவரி 15, 2014- ல் புதிய பொறுப்பை ஏற்க உள்ளார்.

#1980-ம் ஆண்டு பொறியியல் முடித்த பிறகு ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் வேலைக்கு சேர்ந்த இவர் படிப்படியாக முன்னேறி சி.இ.ஓ. பொறுப்புக்கு வந்திருக்கிறார்.

#இவரது தந்தையும் 39 வருடங்களாக ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியவர்.

#வேலை செய்துகொண்டே 1990-ம் ஆண்டு ஸ்டான்ஃபோர்ட் பல்கலைகழகத்தில் எம்.பி.ஏ.வும் படித்திருக்கிறார்.

#ஃபோர்ப்ஸ் நிறுவனத்தின் 100 அதிகாரம் மிக்க பெண்கள் பட்டியலில் இவரும் இடம் பெற்றிருக்கிறார்.